×
 

பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஏமாற்றம்! அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்; நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பட்டதாகாவும், வளர்ச்சி பணிகளுக்கான அறிவிப்புகள் இடம்பெறாதது குறித்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், தமிழகத்திற்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ஆளும் திமுக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், மாநிலத்தின் முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஒன்றிய அரசு வஞ்சித்துள்ளதாக அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சு.வெங்கடேசன் எம்.பி: 

இந்த பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் புதியத் திட்டங்கள் எதுவுமில்லை. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட இடம்பெறாதது ஏன்? தமிழகத்தின் அரிய வகை கனிம வளங்களைச் சுரண்டுவதற்கு மட்டும் பிரத்யேகப் பாதைகள் அமைக்கப்போவதாக அறிவித்துள்ளனர். இது நமது வளங்களைச் சூறையாடும் செயலாகும். திருக்குறளோ, சங்க இலக்கியமோ கூட இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விவகாரம்: அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

செல்வப்பெருந்தகை: 

உத்வேகம் அளிக்கும் எந்தவொரு திட்டமும் இல்லாத வெற்று பட்ஜெட் இது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. தமிழகம் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என அவர் சாடியுள்ளார்.

ரவிக்குமார் எம்.பி (விசிக): 

16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மாநில அரசுகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. தேர்தல் மாநிலமான தமிழகத்திற்கு ஒரு சிறப்பு நிதியும் ஒதுக்கப்படவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்: 

இது ஒரு ஐஏஎஸ் அதிகாரி தயாரித்த உரை போலத்தான் இருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்கும் கட்டுமானத் துறைக்கு இதில் முக்கியத்துவம் இல்லை. ஆதிச்சநல்லூர் போன்றச் சுற்றுலா அறிவிப்புகளைத் தவிரத் தமிழகத்திற்குப் பெரிதாக எதுவும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக வரவேற்பு:

அதே சமயம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இந்த பட்ஜெட்டை வரவேற்றுப் பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

சென்னையை பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுடன் இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்கள் (High-Speed Rail) அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது தமிழக மக்களின் பயணத்தை எளிதாக்கும்" என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் தென்னை மற்றும் முந்திரி மேம்பாட்டிற்கானத் திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார்.

 

இதையும் படிங்க: கலைத்துறைக்கு மகுடம் சூட்டும் தமிழ்நாடு அரசு! 2016-2022-ஆம் ஆண்டிற்கான மாநிலத் திரைப்பட விருதுகள் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share