×
 

தமிழக மீனவர்களின் நலன் காக்கப்படும்; இலங்கை அரசு கண்காணிக்கப்படுகிறது! மத்திய அமைச்சர் எஸ்.பி. சிங் அதிரடி உறுதி!

தமிழக மீனவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது; இலங்கை அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என மத்திய இணை அமைச்சர் எஸ்.பி சிங் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர் பிரச்சனை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் ஆலோசித்து வருவதாகவும், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வியூகங்கள் குறித்துக் கட்சியின் உயர்மட்டக் குழுவே முடிவெடுக்கும் என்றும் அதிரடியாகத் தெரிவித்தார்.

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்  எஸ்.பி சிங் இன்று வருகை தந்தார். கோவில் வாசலில் அவருக்குப் பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சொக்கநாதர் சன்னதிகளில் அவர் பக்திப்பரவசத்துடன் தரிசனம் மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர், “மீன்வளத்துறை அமைச்சகம் சார்பாக இராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழகம் வந்துள்ளேன். பிரதமர் மோடி தலைமையிலான இந்த அரசு கிராமப்புற மேம்பாடு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது” எனப் பெருமிதம் கொண்டார். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிப் மீன் பிடித்ததாகக் கைது செய்யப்படுவது குறித்துக் கேட்டபோது, “தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் முதல் கடமை. இது தொடர்பாக இலங்கை அரசின் செயல்பாடுகளை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்; இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்” எனத் தெளிவுபடுத்தினார்.

இதையும் படிங்க: ஆரவல்லி மலைத்தொடர் பாதுகாப்பு: மத்திய அரசின் உத்தரவை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்!

தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய அவர், “கூடுதல் தொகுதிகள் மற்றும் தேர்தல் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பாஜகவின் டெல்லி மேலிடமும், உயர்மட்டக் குழுவும்தான் இறுதி முடிவெடுத்து முறைப்படி அறிவிக்கும்” எனச் சூசகமாகத் தெரிவித்தார். இராமேஸ்வரம் காசி தமிழ் சங்கமம் விழாவின் மூலம் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான கலாச்சாரப் பாலம் வலுப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதி அளித்தார்.

இதையும் படிங்க: கீழடியில் 11ம் கட்ட அகழாய்வு ஆராய்ச்சி..!! கிரீன் சிக்னல் காட்டிய மத்திய அரசு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share