முட்டைக்கு Expiry Date கட்டாயம்! உ.பி அரசு அதிரடி! ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய சட்டம்!
உ.பி.யில் விற்கப்படும் ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை முத்திரையிடுவதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் விற்கப்படும் ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதியை முத்திரையிடுவது ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை மீறி முத்திரை இல்லாமல் முட்டைகள் விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும் என்று மாநில அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தர பிரதேச உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக ஆணையம் (FSSAI உத்தர பிரதேச) வெளியிட்டுள்ள உத்தரவில், “முட்டை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், ஹோட்டல்கள், உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்து விற்பனை இடங்களிலும் இந்த விதி கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி தேதி (Production Date) மற்றும் காலாவதி தேதி (Best Before / Expiry Date) தெளிவாக முத்திரையிடப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மக்களுக்கு பாதுகாப்பான, புதிய முட்டைகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. பழைய முட்டைகளை புதியவை என்று விற்பனை செய்வது, போலி முட்டைகள், நோய் பரப்பும் அபாயம் உள்ள முட்டைகள் ஆகியவற்றை தடுப்பதே இதன் முக்கிய நோக்கம்.
இதையும் படிங்க: நாட்டையே உலுக்கிய சோகம்...!! - ஐவுளி வியாபாரி வீட்டில் பற்றிய கோர தீ... 4 மாத குழந்தைகள் உட்பட 6 பேர் உடல் கருகி பலி...!
உ.பி.யில் ஆண்டுக்கு 2,500 கோடிக்கும் மேற்பட்ட முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. இதில் பெரும்பகுதி வட இந்திய மாநிலங்களுக்கு செல்கிறது. ஆனால் தேதி முத்திரை இல்லாததால் நுகர்வோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வந்தது.
அரசின் உத்தரவின்படி, முத்திரை இல்லாத முட்டைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்படும். மீண்டும் மீண்டும் மீறினால் விற்பனையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தைகள், மொத்த வியாபார மையங்கள், கோழிப்பண்ணைகள் ஆகியவற்றில் தீவிர சோதனை நடத்த உள்ளனர்.
இந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள பிற மாநிலங்களுக்கும் முன்மாதிரியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோர் அமைப்புகள் இந்த முடிவை வரவேற்றுள்ளன. “இனி முட்டை வாங்கும்போது பயம் இல்லாமல் வாங்கலாம்” என்று பலரும் சமூக வலைதளங்களில் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். ஏப்ரல் 1 முதல் இந்த விதி முழுமையாக அமலுக்கு வருவதால், முட்டை வியாபாரிகள் தற்போதே முத்திரை இயந்திரங்கள் வாங்கி தயாராகி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக-வில் கூட்டணிக்கு கேட் போடும் ரெண்டு பேர்! விஜய் முடிவுக்கே சம்மதம் கிடைக்காத குறை!