×
 
☰

சுங்கச்சாவடிகளில் கட்டாய வழிப்பறியா.? வாய்திறக்குமா மத்திய அரசு..? வேல்முருகன் விளாசல்.!!

சுங்கச் சாவடி கட்டணங்களை வேல்முருகன் சாடியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கிவரும் சுங்கச்சாவடிகளைக் கடுமையாகச் சாடியுள்ளார். சுங்கச்சாவடிகளில் நடப்பது கட்டண வசூலா அல்லது கட்டாய வழிப்பறியா என்றும், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளிக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் என்ற பெயரில் பகல்கொள்ளை நடப்பதை எதிர்த்துத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாக மக்கள் மன்றத்திலும் சட்டமன்றத்திலும் சமரசமின்றிப் போர்க்குரல் எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, கைதும் சிறைவாசமும் அனுபவித்து மக்களுக்காகக் களத்தில் நின்ற இயக்கம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் அவர் நினைவுபடுத்தினார்.சட்டமன்றத்தில் விக்கிரவாண்டி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி, காலாவதியான சுங்கச்சாவடிகளை இழுத்து மூடு என்று கோரியபோது ஒன்றிய பாஜக அரசு செவிசாய்க்கவில்லை. ஆனால் இப்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. பாலங்கள் பாழடைந்துள்ளன. ஆனால் கட்டண வசூல் மட்டும் தங்குதடையின்றி நடப்பது ஏன் என்றும், யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற மனப்பான்மையில் செயல்படுவதாகவும் நீதிமன்றம் மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றம் எழுப்பியுள்ள இந்தக் கேள்விகளையே தமிழக வாழ்வுரிமைக் கட்சி பல ஆண்டுகளாகக் கேட்டு வருவதாக வேல்முருகன் தெரிவித்தார். போட்ட முதலையும் வட்டியும் பல மடங்கு வசூலித்துவிட்ட பிறகும் சுங்கச்சாவடி என்ற பெயரில் மக்கள் பாக்கெட்டில் கை விடுவது வழிப்பறி கொள்ளையல்லவா என்று அவர் கேட்டார். குண்டும் குழியுமான மரணப் பொறிகளில் மக்கள் உயிரை இழப்பதை சேவை என்று சொல்வதா, கட்டணம் மட்டும் முழுமையாக வேண்டும், சாலைப் பாதுகாப்பு என்னவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற திமிரா அல்லது கேட்க யாரும் இல்லை என்ற அகம்பாவமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!

60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என்ற விதியை மீறி ஊருக்கு ஊர் சுங்கச்சாவடி வைத்து மக்களிடம் ரத்தம் உறிஞ்சுவது எந்த வகையில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக்கொள்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் இயங்கும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு, இன்னும் எத்தனை காலம் இந்த வசூல் தொடரும் என்பதை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.சாலைகளில் மக்கள் பயணிப்பதற்காக எந்த வகையிலும் மக்களிடம் வரி வசூல் செய்யக்கூடாது என்பதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிலைப்பாடு என்றும், மக்களின் நிலைப்பாடும் அதுவே என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இல்லையேல் நீதிமன்றக் கண்டனத்தோடு மக்கள் மன்றத்தின் கடுமையான போராட்டங்களையும் மத்திய அரசு சந்திக்க நேரிடும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: இந்தி ஆதிக்கம்..? சீர்குலையும் இருமொழிக் கொள்கை..! வேல்முருகன் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share