பெண்கள் மற்றும் இளைஞர்களே நாட்டின் பலம்! குடியரசு தின உரையில் திரௌபதி முர்மு பெருமிதம்!
குடியரசு தினத்தை முன்னிட்டு உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்தியாவின் உண்மையான பலம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடமே உள்ளது எனப் பெருமிதம் தெரிவித்தார்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இந்த உரையில், இந்தியாவின் அசுர வேகப் பொருளாதார வளர்ச்சி, வறுமை ஒழிப்பு மற்றும் மகளிர் முன்னேற்றம் குறித்து அவர் மிகுந்த பெருமிதத்துடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
மத்திய அரசின் தொடர் முயற்சியால், நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். வறுமையிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மீண்டும் அந்தச் சுழலுக்குள் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் பாராட்டினார். அரசின் நலத்திட்டங்கள் சாமானிய மக்களைச் சென்றடைவதால், அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறை முதல் விண்வெளி ஆய்வு வரை அனைத்துக் களங்களிலும் இந்தியப் பெண்கள் முத்திரை பதித்து வருவதைக் குடியரசுத் தலைவர் பெருமையுடன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக விளையாட்டுத் துறையில் வீராங்கனைகள் படைத்து வரும் சாதனைகள் நாட்டிற்குப் பெருமை சேர்ப்பதாக அவர் புகழ்ந்தார். அதேபோல், நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைஞர்கள் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும் பெரும் முன்னேற்றம் கண்டு வருவதாகவும், அவர்களே ‘வளர்ந்த பாரதத்தின்’ சிற்பிகள் என்றும் அவர் உரையாற்றினார்.
இதையும் படிங்க: குடியரசு தின பாதுகாப்பு: ரயில் நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்! 2,500 போலீசார் தீவிர கண்காணிப்பு!
உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகத் திகழ்வதாக முர்மு பெருமிதம் தெரிவித்தார். விரைவில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளில் அரசு முதலீடு செய்வதன் மூலம் நாட்டின் பொருளாதார வலிமை பன்மடங்கு அதிகரித்து வருவதாகவும் அவர் தனது உரையில் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: குடியரசு தினம்: திருச்சி ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு.. பயங்கரவாத அச்சுறுத்தலால் தீவிர நடவடிக்கை..!!