ஆடியோ லீக் ஆனதால் அதிருப்தியில் ஆ.ராசா!! புறக்கணிக்கும் அறிவாலயம்! சமரசம் செய்யும் சபரீசன்!
தி. மு.க., துணை பொதுச்செயலராகவும், நீலகிரி எம்.பி.,யாகவும் உள்ளவர் ஆ.ராஜா. அவரது பேச்சால் ஈர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது அருகில் வைத்துக் கொண்டார். மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும் வழங்கினார்.
தி.மு.க. துணைப் பொதுச்செயலரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராஜா, கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் புறக்கணிக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியைத் தீர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் நேரடியாக முயற்சி எடுத்துள்ளார்.
சென்னை மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ராஜாவுக்கு வேட்பாளர் தேர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. மேலும், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு தொடர்பாக அவர் பேசிய ஆடியோ விவகாரம் கட்சிக்குள் பெரும் புயலை கிளப்பியது.
இதனால் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இருந்தும் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. வேட்பாளர்களும் மாவட்ட நிர்வாகிகளும் அவரை பிரசாரத்துக்கு அழைக்காததால், ராஜா பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: திமுகவுக்கு குறையும் கூட்டம்! உளவுத்துறை அதிர்ச்சி ரிப்போர்ட்! மருமகன் சபரீசனை களமிறக்கிய மு.க.ஸ்டாலின்!!
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரம், கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இந்தப் பின்னணியில் ராஜாவின் பேச்சுகள் மற்றும் ஆடியோக்கள் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து தலைவலியாக இருந்து வருகின்றன.
இந்நிலையில், ராஜாவின் அதிருப்தியைத் தீர்க்கும் வகையில் சபரீசன் பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்றார். அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். அப்போது ராஜா தனது ஆதங்கங்களை வெளிப்படையாகக் கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது.
எனினும், சபரீசன் எந்த உத்தரவாதமும் அளிக்காமல், “தேர்தல் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம். அதுவரை அமைதியாக இருங்கள்” என்று ஆறுதல் மட்டும் கூறி வந்தார். இந்த சந்திப்பு, தி.மு.க.வின் உள் மோதல்களை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
ராஜா, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். மத்திய அமைச்சர் உள்ளிட்ட உயர் பதவிகளையும் வகித்தவர். ஆனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் அவருக்கு அளிக்கப்படும் புறக்கணிப்பு, அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கும் நிலையில், தி.மு.க. தலைமை ராஜா விவகாரத்தை எப்படி கையாளப் போகிறது என்பது கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரீசனின் சமரச முயற்சி வெற்றி பெறுமா அல்லது ராஜா தரப்பின் அதிருப்தி தொடருமா என்பதை அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: சரிந்தது ஆ.ராசா ராஜ்ஜியம்! ஓரங்கட்டும் திமுக!! ஒதுக்கி வைக்கும் வேட்பாளர்கள்!! ஆடியோ ரிலீசானதால் அவஸ்தை!