×
 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகள் சாந்தி மறைவு! மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவையொட்டி, சென்னை காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் மூத்த மகளான திருமிகு சாந்தி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தியதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் ஈடுஇணையற்ற மகா கலைஞரான மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகள் திருமிகு சாந்தி (வயது 71). இவரது பெயரிலேயே சிவாஜி குடும்பத்தினரின் வரலாற்றுப் புகழ்பெற்ற 'சாந்தி தியேட்டர்' திரையரங்கம் சென்னை அண்ணா சாலையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக மூச்சுத்திணறல் மற்றும் வயது மூப்பு தொடர்பான தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மருத்துவர்களின் தீவிர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை அவர் காலமானார்.

சாந்தி அவர்களின் மறைவுச் செய்தி அறிந்தவுடன், திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது மனைவி திருமிகு துர்கா ஸ்டாலின், திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோருடன் உடனடியாகக் காவேரி மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த சாந்தி அவர்களின் உடலுக்கு மலர் மாலை அணிவித்துத் தனது இறுதி மரியாதையையும் ஆழ்ந்த அஞ்சலியையும் செலுத்தினார். தொடர்ந்து, பெரும் சோகத்தில் மூழ்கியிருந்த அவரது சகோதரர்களான திரைப்படத் தயாரிப்பாளர் ராம்குமார், பிரபல நடிகர் பிரபு மற்றும் குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்த்தாய் தன் அருந்தவ புதல்வனை இழந்துவிட்டாள்! சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்!

இதனைத் தொடர்ந்து கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள உருக்கமான இரங்கல் செய்தியில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்து காட்டியவர்கள். காலத்தால் கரையாத அவர்களது உன்னதமான நட்பின் பாசம், எங்கள் இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்து வைத்துள்ளது. அந்த அளப்பரிய பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மாறாத அன்பு பாராட்டி வந்த சகோதரி திருமிகு சாந்தி அவர்களின் இந்த மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. 

அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் திரு. நாராயணசாமி, மகள்கள் திருமிகு. விஜி லட்சுமி, திருமிகு. சத்யவதி, சகோதரர்கள் திரு. ராம்குமார், திரு. பிரபு உள்ளிட்ட ஒட்டுமொத்தக் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நல்ல வேளை தப்பிச்சிட்டேன்!! கொளத்தூர் மக்களே.. கோடான கோடி நன்றி!! கும்பிடு போட்ட மு.க ஸ்டாலின்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share