விஜய்யுடன் கைகோர்த்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ! தமிழக வெற்றிக் கழகத்தில் சேரும் சீனியர் தலைவர்கள்!
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகரன் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக் கொண்டார்.
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அதிமுக-வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியுமான ஜே.சி.டி பிரபாகரன் இன்று அதிகாரப்பூர்வமாக நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த சில மாதங்களாகவே விஜய் தலைமையிலான கட்சியில் இணையப் போவதாக ‘கிசுகிசுக்கள்’ உலா வந்த நிலையில், இன்று அதற்கான ‘சுபம்’ போடப்பட்டுள்ளது. ஜே.சி.டி பிரபாகரன் போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்கள் விஜய்யின் பக்கம் சாய்வது, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக-வின் அடித்தளத்தைப் பலப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அதிமுக மற்றும் பல்வேறு திராவிட இயக்கங்களில் களப்பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், விஜய்யின் அரசியல் அடித்தளத்தை மேலும், உயர்த்துவதிலும், வளர்சியிலும் முக்கியப் பங்கு வகிப்பார் எனத் தெரிகிறது. இந்தச் சேர்க்கை, தவெக வெறும் ரசிகர் கூட்டமல்ல, அது அரசியல் களத்தில் மல்லுக்கட்டத் தயாராக உள்ளது என்பதை மற்ற கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது.
நடிகர் விஜய் தனது ‘தமிழக வெற்றி கழகத்தை’ தொடங்கியதில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் தவெக-வை நோக்கி ‘படை’ எடுக்கத் தொடங்கியுள்ளனர். அந்த வரிசையில், இன்று சென்னை வில்லிவாக்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும், அதிமுக-வின் முக்கிய முகமாக அறியப்பட்டவருமான ஜே.சி.டி பிரபாகரன், விஜய் முன்னிலையில் தவெக-வில் இணைந்தார். அரசியலில் பல ‘சீசன்களை’ கண்ட ஜே.சி.டி பிரபாகரன், விஜய்யின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளால் கவரப்பட்டு இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: 2026 புலிகள் கணக்கெடுப்பு: : ஜனவரி 5 முதல் தமிழகத்தின் 5 காப்பகங்களில் ஆய்வு!
ஜே.சி.டி பிரபாகரனின் வருகை தவெக-விற்கு ஒரு பெரிய ஆதரவாகக் கருதப்படுகிறது. குறிப்பாகச் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதிலும், பூத் கமிட்டிகளைப் பலப்படுத்துவதிலும் இவரது அனுபவம் விஜய்க்குப் பேருதவியாக இருக்கும். ஏற்கனவே பல்வேறு கட்சிகள் விஜய்யின் அரசியல் வருகையை ‘அனுமானம்’ என விமர்சித்து வரும் நிலையில், இது போன்ற அனுபவமிக்கத் தலைவர்களின் வருகை, விஜய் களத்தில் ‘அனுபவ’ பலத்துடனும் மோதத் தயாராகி வருவதைக் காட்டுகிறது.
வரும் 2026 தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தத் துடிக்கும் விஜய்க்கு, ஜே.சி.டி பிரபாகரன் போன்ற ‘சீனியர்’ அரசியல்வாதிகள் பின்னால் இருந்து ஆலோசனைகளை வழங்குவது கட்சியின் முதிர்ச்சியை அதிகப்படுத்தும். ஜே.சி.டி பிரபாகரனைத் தொடர்ந்து இன்னும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைய வரிசையில் நிற்பதாகத் தகவல்கள் கசிகின்றன. இதனால் ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வின் முகாம்களில் சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியலில் இது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கஞ்சா ஹீரோக்களின் கூடாரமாகிவிட்டது தமிழ்நாடு! - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!