#BREAKING “தர்மேந்திர பிரதான் பதவி விலகுங்க”... மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு குரல் கொடுத்த ஜோதிகா...!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு நடிகை ஜோதிகா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவின் மூலம் மாணவர்களுடன் தனது ஒற்றுமையை வெளிப்படுத்திய ஜோதிகா, உண்மையை மறைக்காமல் தைரியமாக வெளிப்படையாகப் பேசும் இன்றைய "ஜென் Z" தலைமுறையை நினைத்து பெருமைப்படுவதாகவும், தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அவரது பதிவில், “தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். எங்கள் நாட்டின் மாணவர்களுக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் நான் துணையாக நிற்கிறேன். நான் பொறுப்புணர்வுக்கும், ஜனநாயக இந்தியாவுக்கும், கல்வி சீர்திருத்தத்திற்கும் ஆதரவாக இருக்கிறேன். சோனம் வாங்சுக், அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் போன்ற இளைஞர்களைப் போன்ற பிள்ளைகளை வளர்க்கும் தாய்மார்களாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். உண்மையை அச்சமின்றி வெளிப்படையாகப் பேசும் 'ஜென் Z' தலைமுறையை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். 'நாம்தான் இந்தியா' என்பதை நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிரூபித்துள்ளீர்கள். அனைத்து அழுத்தங்களையும் உடைத்தெறிந்ததற்கு நன்றி. எங்களை அச்சமின்றி பேசத் துணிச்சலூட்டியதற்கு நன்றி. ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் ஒழிப்பு அவசியம்... போர்க்களமாகும் தமிழகம்... மே 17 இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான திரைப்பட பிரபலங்களும் குரல் கொடுத்துள்ளனர். நடிகர்கள் மம்முட்டி, இந்திரஜித் சுகுமாரன், மீனாட்சி, குஞ்சாக்கோ போபன், சிஜு சன்னி, ரஹ்மான், வினய் ஃபோர்ட், காளிதாஸ் ஜெயராம், நஸ்லின், நிகிலா விமல், கிரேஸ் ஆண்டனி, தீப் தாமஸ், ஹாஷிர் உள்ளிட்டோர் இன்று மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்பாக விஸ்மயா மோகன்லால், டொவினோ தாமஸ், பார்வதி திருவோத்து, ரீமா கல்லிங்கல், பிராச்சி தெஹ்லான் உள்ளிட்டோரும் இந்த போராட்டத்திற்கு வலுவான ஆதரவை தெரிவித்திருந்தனர். மேலும், பாலிவுட் மற்றும் தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும் டெல்லி மாணவர் போராட்டத்திற்கு தங்களது ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அத்துமீறல்..! மாணவர்கள் மீது பெல்லட் குண்டுவீசி தாக்குதல்... ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு..!