டெண்டர் ரத்து விவகாரம்! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா துறையில் அதிகாரிகள் மாற்றம் சர்ச்சை!
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளில் நடந்த உயர் அதிகாரிகள் மாற்றத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளில் சமீபத்தில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்ட விதம் மற்றும் அதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து அரசு பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சங்கத்தின் தரப்பில் கூறப்படுவதாவது, பொதுப்பணித் துறை செயலராக இருந்த மங்கத்ராம் சர்மா மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு போக்குவரத்துத் துறையில் பணியாற்றிய சுன்சோங்கம் ஜடக் சிரு நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நெடுஞ்சாலைத் துறை செயலராக இருந்த செல்வராஜ் உடனடியாக மாற்றப்படாமல், பின்னர் பொதுப்பணித் துறைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆட்சிக் காலத்தில் பல முக்கிய சாலைத் திட்டங்களுக்கான டெண்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான உத்தண்டி சாலைத் திட்ட டெண்டர் முறைகேடு சந்தேகத்தின் பேரில் தற்போதைய அரசு ரத்து செய்தது. அந்த டெண்டர் வெளியிடப்பட்ட காலத்தில் துறை செயலராக இருந்த அதிகாரி பின்னர் வேறு துறைக்கு மாற்றப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக பொறியாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: போதைப்பொருள் சர்ச்சை! அமைச்சர் சரத்குமாரிடம் விசாரணை! முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு?
மேலும், உத்தண்டி சாலை டெண்டர் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரியை வேறு துறைக்கு மாற்றியதன் நோக்கம் என்ன என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட முக்கிய டெண்டர்களுக்கும் அதே அதிகாரி ஒப்புதல் அளித்ததாகவும், அவை தொடர்பாக துறைக்குள் ஆய்வு நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பொதுப்பணித் துறைக்கு சமீபத்தில் வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுன்சோங்கம் ஜடக் சிரு குறுகிய காலத்திலேயே நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதற்கான காரணம் குறித்தும் தெளிவான விளக்கம் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனுடன், பொதுப்பணித் துறையில் பொறியாளர்கள் மாற்றத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாற்றப்பட்ட தலைமை பொறியாளர்களுக்கு அவர்கள் ஏற்கனவே வகித்த பதவிகளே கூடுதல் பொறுப்பாக மீண்டும் வழங்கப்பட்டிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த மாற்றங்கள் அனைத்தும் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளின் அடிப்படையில்தானா என்பதை அரசு விளக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக முதல்வர் விஜய் நேரடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசு பொறியாளர்கள் சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிங்க: தவெக அமைச்சர் மீது விசிக ஊழல் புகார்! “ஆதாரம் இருந்தால் காட்டுங்கள்” – ராஜிவ் பதிலடி!