×
 

“கையாளத் தவறிய கையாலாகாத அரசு...” - திமுகவை வெளுத்து வாங்கிய அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார்...!

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு இப்பிரச்சினைகளைச் சரிவர கையாளத் தவறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் சூடு அதிகரித்துள்ள நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி, தொகுதியில் நீண்டநாள் நிலுவையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு இப்பிரச்சினைகளைச் சரிவர கையாளத் தவறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தொகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டங்களில் பேசிய விஜயகுமார், குடிநீர் விநியோகம், கழிவுநீர் வடிகால், சாலை பராமரிப்பு ஆகியவை முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தார். மெட்ரோ ரயில் பணிகளால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் உள்ளூர் வசதிகள் சீரமைக்கப்படும் என்றும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் கூறினார். சிறு வணிகங்களுக்கு ஆதரவு அளிக்கும் திட்டங்களும் அமல்படுத்தப்படும் என அவர் உறுதியளித்தார்.

இதற்கிடையில், வில்லிவாக்கம் தொகுதி பல ஆண்டுகளாக பல்வேறு குடியிருப்பு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. கால்வாய்களில் தேங்கும் கழிவுநீர் மற்றும் துர்நாற்றம், குப்பை மேலாண்மை குறைபாடு, சேதமடைந்த சாலைகள், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்ந்தும் மக்களை பாதித்து வருகின்றன.

இதையும் படிங்க: விறுவிறு தேர்தல்..! பெண்கள் பாதுகாப்புக்கு வார் ரூம்..! அதிமுக சார்பில் கூடுதல் வாக்குறுதிகள் அறிவிப்பு..!

மெட்ரோ பணிகளுக்காக வில்லிவாக்கம் பேருந்து முனையம் மூடப்பட்ட பிறகு, முதியவர்கள் மற்றும் நோயாளிகள் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு செய்யத் தவறிவிட்டது.

மேலும், வில்லிவாக்கம் ஏரி மேம்பாட்டு திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருப்பதும் மக்கள் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி மின்தடை மற்றும் அடிப்படை வசதிகள் குறைபாடு குறித்தும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க அரசு கால்வாய் சுத்தம், வடிகால் மேம்பாடு, ஏரி புதுப்பிப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாததும், பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு போதிய பதில் அளிக்காததும் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.

தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், இதைக் கட்டுப்படுத்த ஆளுங்கட்சி எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் தொகுதியில் நிலவும் அடிப்படை வசதி பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்க்கும் வாக்குறுதிகள் ஆகியவை இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்சார அம்சங்களாக மாறியுள்ளன.

இதையும் படிங்க: வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்! தளியில் பாஜக வேட்பாளருக்காக சந்திரபாபு நாயுடு அதிரடி பரப்புரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share