“நேற்று கமல்... இன்னைக்கு விஜய்... நாளைக்கு சிம்பு... எந்த கொம்பன் வந்தாலும்...” - படு ஓபனாக சவால் விட்ட சி.வி.சண்முகம்...!
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு கட்சி முளைக்கும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை
திமுக கூட்டணி சிதறி வருகிறது அதிமுக கூட்டணி வலிமை பெற்று வருகிறது. தியேட்டரில் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம். அதிமுகவுக்கு வாக்களிப்பதை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது. நாளை சிலம்பரசன் கூட வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு கட்சி முளைக்கும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை: திண்டிவனத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜயை மறைமுகமாக விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க யாரும் வரவில்லை கூறினார்கள். ஆனால் இன்றைக்கு வலுவான கூட்டணியை அதிமுக அமைத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, வலுவான கூட்டணி அமைத்துள்ளது. பாஜக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், பாமக, புரட்சி பாரதம் உள்கிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்த்து மிகப் பெரிய வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.
மோடி தலைமையில் பிரம்மாண்ட மாநாடு போன்ற கூட்டத்தை நடத்திக்காட்டியுள்ளோம். திமுக கூட்டணி வலுவான கூட்டணி, அசைக்க முடியாத கூட்டணி என கூறினார்கள். இன்றைக்கு திமுக கூட்டணி கலகலத்துப்போயுள்ளது. ஒப்பாரி வைத்து வருகிறார்கள். திமுக கூட்டணி கட்சிகளின் காலை பிடித்து கெஞ்சிக் கொண்டிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக தொகுதிகள் தரவில்லை என்றால் வெளியேறி விடுவோம் என கூறி வருகிறார்கள். திமுக கூட்டணி உடைந்து சிதறி வருகிறது. ஆனால் அதிமுக வலிமை பெற்று வருகிறது. நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும். அதனை யாராலும் மாற்ற முடியாது. அது காலத்தின் கட்டாயம்.
இதையும் படிங்க: தனித்துப் போட்டி என திமுகவால் அறிவிக்க முடியுமா? தவெக அருண்ராஜ் சவால்..!
அதிமுகவுக்கு களம் சாதகமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்த களம் தற்போது இல்லை. அதிமுகவுக்கு சாதகமாக களம் மாறியுள்ளது. யார் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். நமக்கு அன்றும், இன்றும், என்றும் திமுக தான் நமக்கு எதிரி. மூப்பனார், வைகோ, விஜயகாந்த் வந்தார் ஆனால் அனைவரும் சென்று விட்டனர். அதன் பிறகு இன்றைக்கு திமுகவிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் கமலஹாசன் வந்தவுடன் மாற்று சக்தி வந்து விட்டது என கூறினார்கள். தமிழ்நாட்டுக்கு மாற்றத்தை உருவாக்க வந்த கமலஹாசன் அவர் தொகுதியில் தோற்றுப்போனார். வெற்றி பெறவில்லை.
தற்போது இன்னும் சிலர் வந்திருக்கிறார்கள், சினிமா தியேட்டரில் விசில் அடிக்கலாம். பேருந்தை நிறுத்த விசில் அடிக்கலாம். அதிமுகவுக்கு வாக்களிப்பதை எந்த கொம்பனாலும் நிறுத்த முடியாது. நாளை சிலம்பரசன் கூட வரலாம். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு கட்சி முளைக்கும் அதைப்பற்றி நமக்கு கவலையில்லை.
இதையும் படிங்க: கரூர் மாதிரி ஆக்கிறாதீங்க... சேலத்திலும் வேலையைக் காட்டும் தவெக... மா.செ.வுக்கு கமிஷ்னர் கொடுத்த வார்னிங்...!