“சட்டம் ஒழுங்கை காப்பாத்த முடியல... ஆனா....” - விஜய் அரசை வெளுத்து வாங்கிய ஆர்.பி.உதயகுமார்...!
சட்டம் ஒழுங்கு, காப்பாற்ற முடியவில்லை. இன்ஸ்டாவிலே ரீல்ஸ் போட்டு, மக்களை திசை திருப்புகிறது தவெக அரசு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்,
ரு காலத்தில் அறிவைத் தேடி மனிதன் அலைந்தான். இன்று அறிவே அவனைத் தேடி, அவனது கைப்பேசிக்குள் வந்து விடுகிறது. விரல் நுனியில் உலகம் இருப்பதாக நாம் பெருமிதம் கொள்கிறோம். ஆனால், அந்த உலகத்தை உண்மையில் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா என்ற கேள்வி தினமும் எழுந்துகொண்டே இருக்கிறது.
இன்றைய உலகில் தகவல்களின் வேகத்தைவிட வேகமாக ஓடுவது மனிதர்களின் முடிவுகள்தான். உண்மையை அறியப் பொறுமை இல்லை; ஆராய நேரமும் இல்லை. காலையில் கண் விழித்ததும் தொடங்கும் செய்தி அறிவிப்புகள், சமூக ஊடகப் பதிவுகள், குறுஞ்செய்திகள், காணொளிகள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பதில்கள் என ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான தகவல்கள் நம் மனதைத் தடுமாற வைக்கின்றன.
இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு இயக்கம்: 'துளி' இலச்சினையை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் விஜய் தொடக்கம்!
அளவுக்கு அதிகமான தகவல்கள் அறிவை வளர்ப்பதற்குப் பதிலாக, சிந்தனையை மூழ்கடித்துவிடுகின்றன. முன்பெல்லாம் ஒரு செய்தி வந்தால், அது ஏன் அப்படி நடந்தது, அதன் விளைவு என்ன, அதனால் நமக்கு என்ன பயன் என்ற கேள்விகளைக் கேட்டு விவாதிப்பார்கள். அந்த இடைவெளியில்தான் புரிதல் பிறக்கிறது. ஆனால், இன்று அந்த இடைவெளியே இல்லை.
ஒரு செய்தி முடிந்தவுடன் அடுத்த செய்தி, ஒரு காணொளி முடிந்தவுடன் அடுத்த காணொளி என மூளைக்குச் சிந்திப்பதற்குக்கூட நாம் நேரம் கொடுப்பதில்லை. உண்மையைத் தேடும் பொறுமை நம்மைவிட்டு விலகிச் சென்று வெகுகாலம் ஆகிவிட்டது.
ஒரு வரலாற்று நிகழ்வை மூன்று வரிகளில் படித்துவிட்டு, அதைப் புரிந்துகொண்டதாகத் தவறான தீர்ப்புகளை இப்போது நாம் எழுதி வருகிறோம். இன்றைய தலைமுறையின் மிகப்பெரிய சவால் தகவல்களைப் பெறுவதில் இல்லை; அவற்றைத் தேர்ந்தெடுப்பதில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் நம் கவனத்தைக் கவர்வதற்காக லட்சக்கணக்கான சமூக வலைதளப் பதிவுகள் வரிசைகட்டி நிற்கின்றன.
இளைஞர்களின் எதிர்காலமோ கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்றைய சமூகத்தையும் இளைய தலைமுறையையும் பாதுகாக்க வேண்டிய தவெக அரசு, அதில் தவறிவிட்டது என்பதைத்தான் இன்றைய நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றன.
இன்ஸ்டா ரீல்ஸில் புரட்சி செய்து ஆட்சி அமைத்த தவெக அரசு, இந்த ஐந்து மாதங்களில் வரலாறு காணாத வகையில் இன்ஸ்டா ரீல்ஸுக்குப் விளம்பரம் பெற்றுத் தந்துள்ளது. இதுதான் இளைஞர்களுக்குக் கிடைத்த பம்பர் பரிசாக இருக்கிறது.
ஒருபுறத்தில் பொழுதுபோக்கிற்காக இன்ஸ்டா ரீல்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கி, அதுவே பின்னர் ஆரோக்கியமற்ற, ஆபத்தான கடும் போட்டியாக மாறி, இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. இது நம் அனைவருக்கும் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டா சமூக வலைதளத்தில் தாங்கள் வலம் வருவதைச் சில இளைஞர்கள் ரீல்ஸாக வெளியிட்டு, தங்கள் வாழ்க்கையையே தொலைத்து வருகின்றனர். இதனால் ஏற்படும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுக்க முடியாமல், இன்ஸ்டா ரீல்ஸில் ஆட்சி அமைத்த தவெக அரசு தடுமாறி வருகிறது.
சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இன்ஸ்டா ரீல்ஸால் பிரபலமான 26 வயது சுள்ளான் மதன், முன்விரோதம் காரணமாகப் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டார். இதற்குப் பழி தீர்ப்போம் என்று அவரது ஆதரவாளர்கள் அதே இன்ஸ்டாவிலேயே மிரட்டல் விடுத்து வருகின்றனர். எங்கே போகிறது இளைய சமுதாயம்?
அதேபோல், மதுரையில் யார் டான் என்று இன்ஸ்டாவில் காணொளி வெளியிட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில், 24 வயது சூர்யா கொலை செய்யப்பட்டார். கோவையில் அரிவாளுடன் காணொளி வெளியிட்டது தொடர்பாக இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் அசோக்குமார் கொலை செய்யப்பட்டார். அதோடு, எதிர்த் தரப்பினருக்கு காணொளி மூலம் மிரட்டல் விடுத்த ஸ்ரீராம் என்பவரும் பழிவாங்கப்பட்டார்.
இதேபோல், இன்ஸ்டாவில் பிரபலமானவர்கள் ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான போட்டியைக் கடைப்பிடிப்பதை விட்டுவிட்டு, அங்கு கடும் போட்டி நிலவும் சூழல் உருவாகியுள்ளது. கடுமையான, வரையறையற்ற, அநாகரிகமான விமர்சனங்களால் எத்தனை இன்ஸ்டா பிரபலங்கள் இன்று தற்கொலை முடிவை எடுத்திருக்கிறார்கள்?
இன்ஸ்டா பிரபலங்கள் இன்று பிரபலத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பிரபலம் முக்கியம்தான்; ஆனால், வாழ்க்கையே பிரச்சினையாகிவிடக் கூடாது.
இந்தச் சூழலில், சமீபத்தில் மதுரையைச் சேர்ந்த வீரமணி என்பவர் இன்ஸ்டாவில் பிரபலமாகி, கடைசியில் அதனால் வீட்டைக் காலி செய்துவிட்டு, ஊரைவிட்டே ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்ஸ்டாவால் பிரச்சினைக்கு உள்ளாகி, வாழ்க்கையே விரக்தியாக மாறிய அவரது நிலை குறித்த செய்தி, மாநிலம் கடந்து மக்களின் கவனத்தை ஈர்த்தது.
சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் காணொளி வெளியிடுவது, ரவுடித்தனத்தைப் புகழ்வது, மிரட்டல் விடுப்பது போன்றவை இளைஞர்கள் மத்தியில் புதிய கலாச்சாரமாகக் காட்டுத்தீபோல் பரவி வருகின்றன. இது மிகப்பெரிய ஆபத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலம் குறித்த கவலை நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்காகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, அதிர்ச்சியளிக்கும் செய்திகள் அதிகரிப்பதற்கான கருவியாக மாற்றக்கூடாது. அறிவின் வளர்ச்சி மனிதனின் ஆயுளைக் கூட்ட வேண்டுமே தவிர, அவனது ஆயுளை முடிப்பதாக இருக்கக்கூடாது என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பும்.
ஆகவே, தவெக அரசு தற்போது தடுமாறிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அறிவிக்கப்படாத மின்வெட்டுக்குத் தீர்வு காண முடியவில்லை. ஆனால், இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு மக்களைத் திசைதிருப்புகிறார்கள்.
அதேபோல், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை. இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு மக்களைத் திசைதிருப்புகிறார்கள். விலைவாசி உயர்வே இல்லை என்பதுபோல் இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டு மக்களைத் திசைதிருப்புகிறார்கள்.
இப்போதுகூட வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, ரீல்ஸ் போடுவதற்காக மட்டுமே அமைச்சர்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதையும் பார்க்கிறோம்.
ஆகவே, இன்ஸ்டா ரீல்ஸ் என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இன்றைக்குத் தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசுக்கும் ஒரு மோகமாக இருக்கிறது. இந்த இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்திலிருந்து தவெக அரசும் இளைய சமுதாயமும் எப்போது வெளியே வருவார்கள்? உண்மையான உலகத்தை எப்போது உணர்வார்கள்? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: “பொய்யிலே பிறந்து... பொய்யிலே வளர்ந்த...” - எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி விஜய் அரசை விளாசிய ஆர்.பி.உதயகுமார்...!