அப்படி பேசியிருக்கக்கூடாது... மனம் வருந்தி பகிரங்க மன்னிப்பு கோரிய செங்கோட்டையன்...!
ஆர்.பி.உதயகுமார் தாயார் மரணம் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவால் நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும் என்றும், இதுகுறித்து 10 நாட்களுக்குள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். மறுநாளே அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தூக்கியடித்த எடப்பாடி பழனிசாமி, அவரது கோரிக்கைகளை நிராகரித்துவிட்டதையும் மறைமுகமாக உணர்த்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த நடவடிக்கை அதிமுகவிற்குள் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று செங்கோட்டையனைக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , “எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி சுற்றுப் பயணத்தை பொறுக்க முடியாமல் சிலருக்கு வயிற்று எரிச்சல் ஏற்பட்டு இருக்கலாம். அவர்கள் தங்கள் இயலாமையினால் ஏற்படும் பொறாமையாகும். அந்த பொறாமைத் தீயினால் கட்சி ஒற்றுமை என்ற பெயரை பயன்படுத்தி அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தி விடலாம் என கணவு காண்கிறார்கள். அந்த வயிற்று எரிச்சல் மனிதர்களுக்கு தோல்விதான் பரிசாக கிடைக்கும்” எனக்கூறியிருந்தார்.
இதையும் படிங்க: “பாவம் அம்மா இறந்த துக்கத்துல அப்படி பேசியிருப்பாரு”... ஆர்.பி. உதயகுமாருக்கு ஆறுதல் சொன்ன செங்கோட்டையன்...!
இந்நிலையில் நேற்றிரவு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம் ஆர்பி உதயகுமார் கண்டனம் தெரிவித்தது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரது தாயார் இறந்து இருக்கிறார். அதை பார்க்கச் சொல்லுங்கள் என பதிலளித்தார். அரசியல் ரீதியான விமர்சனத்திற்கு குடும்ப உறுப்பினரின் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையில் செங்கோட்டையன் பேசியது அதிமுக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியது.
இதனால் உடனே மனம் வருத்திய செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டும். என்னால் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. அதனால் இப்போது கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என உருக்கமாக பேசினார்.
இதையும் படிங்க: அம்மா ஆத்மா சும்மா விடாது! வயிற்றெரிச்சல் பிடிச்ச மனுஷங்க... கொந்தளித்த ஆர்.பி.உதயகுமார்