“மக்களோட உயிரு பெருசா? சினிமா பெருசா?”- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவேசம்...!
மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த அருணாச்சலம் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் நடைபெறுவது மக்களாட்சி இல்லை சினிமா ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது .மக்களின் உயிர் பெரிதா சினிமா பெரிதா என்றால் இவர்களுக்கு சினிமா தான் பெரிதாக தெரிகிறது என அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் ஆவேசம்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த இளைஞர் அருணாச்சலம், கடந்த 17ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்ற போது அவர் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் “காவல்துறையினர் தாக்குதலால் தான் அருணாச்சலம் உயிரிழந்தார்” என குற்றம் சாட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: ரோகினி தியேட்டரில் பரபரப்பு... நீட்டை ஒழிக்கணும்... போராடிய இளைஞரை கைது செய்த போலீஸ்..!!
சம்பவ இடத்திற்கு வந்த அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன், அருணாச்சலத்தின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “நலமான உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அருணாச்சலம், காவல்துறை விசாரணையின் போது எப்படி மரணமடைந்தார் என்பது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. காவல்துறையினர் தாக்கியதாலேயே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம். எனவே, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “இந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். தற்போது தமிழகம் முழுவதும் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்றார். இந்த ஆட்சி சினிமாவில் ஆட்சி நடப்பது போல் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தான் உள்ளது.
சினிமாவில் ஆட்சி நடப்பது போல் தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களாட்சி இல்லை சினிமா ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களின் உயிர் பெரிதா சினிமா பெரிதா என்றால், இவர்களுக்கு சினிமா தான் பெரிதாக தெரிகிறது. இதனால்தான் இதை சினிமா ஆட்சி என்று சொல்கிறோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: "தவெககாரன்"...! குற்றவாளிகள் கூடாரமா TVK..? CM விஜய் மீது நயினார் தாக்கு..!