×
 

மதுராந்தகம், தாராபுரத்தில் களமிறங்கும் 40 நட்சத்திர பேச்சாளர்கள்! அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் கிரீன் சிக்னல்!

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அதிமுக ஏற்கனவே இரு தொகுதிகளுக்கும் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

சென்னை: தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. இரு தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்ள அதிமுகவின் 40 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து இரு தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிடுகின்றனர். திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமனும், தாராபுரத்தில் எஸ்.சுகன்யாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தாராபுரத்தில் தவெக வேட்பாளர் கார் தாக்கப்பட்ட விவகாரம்! பானுமதி, பொள்ளாச்சி ஜெயராமன் உட்பட 9 பேர் மீது வழக்கு!

இதேபோல் தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகளும் இரு தொகுதிகளிலும் களத்தில் உள்ளதால் ஐந்து முனைப்போட்டி உருவாகியுள்ளது. இதனால் தேர்தல் பிரசாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, ஓ.எஸ்.மணியன், காமராஜ் உள்ளிட்ட 40 பேர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி இரு தொகுதிகளிலும் நேரடியாக பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுராந்தகத்தில் வரும் 25, 26-ம் தேதிகளிலும், அக்டோபர் 3-ம் தேதியும் அவர் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாராபுரத்திலும் அவர் தங்கி பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க அதிமுக ஏற்கனவே இரு தொகுதிகளுக்கும் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

மேலும், அதிமுக சமர்ப்பித்த நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share