×
 

“தமிழ்நாட்டில் கேசினோ திறக்க சதி!” - இபிஎஸ் ஆதரவாளர் ஆதி ராஜாராம் பகிரங்கக் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கேசினோ சூதாட்ட கிளப்புகளைத் திறக்கும் சதியை மறைக்கவே அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என ஆதி ராஜாராம் பகிரங்கக் குற்றச்சாட்டியுள்ளார்.

“கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட அதிருப்தியாளர்கள் நீக்கப்பட்ட பிறகுதான் அதிமுக உண்மையான பலத்தைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கேசினோ எனப்படும் சூதாட்ட கிளப்புகளைத் திறக்கும் மாபெரும் சதியை மக்களிடமிருந்து மறைப்பதற்காகவே, தற்போது சிலர் திட்டமிட்டு அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி நாடகமாடுகிறார்கள்” என ஈபிஎஸ் தரப்பு மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் அதிரடிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய பின், தென் சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் ஆதி ராஜாராம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புக்குப் பிந்தைய அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து அவர் வெளிப்படுத்திய அதிரடி கருத்துகள் வருமாறு:

சட்டமன்றத்தில் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எஸ்பி. வேலுமணி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், கட்சி இப்போதுதான் தூய்மையடைந்துள்ளது என்றார். "துரோகிகள் நீக்கப்பட்ட பிறகுதான் கட்சிக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போன்ற உணர்வில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். காட்டாற்று வெள்ளம் போல தொண்டர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியும், பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அமோக வரவேற்பும் காணப்படுகிறது. கட்சிக்கும், தொண்டர்களுக்கும் விசுவாசமாக இருக்கும் உண்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எங்களோடுதான் உள்ளனர். 'லாட்டரி ராஜமாதா' லீமா ரோஸின் பின்னால் சென்ற எம்.எல்.ஏ-க்கள்தான் கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுகிறார்கள்" என்று சாடினார்.

இதையும் படிங்க: "அதிமுக ஒரு கடல்... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்": சசிகலா உருக்கமான வேண்டுகோள்!

கொறடா உத்தரவை மீறி வாக்களித்த எம்.எல்.ஏ-க்கள் தங்களின் பதவியை இழப்பது உறுதி என்று ஆதி ராஜாராம் தெரிவித்தார். "விதிமீறலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ-க்கள் தங்களின் அடிப்படை தகுதியை இழந்துவிட்டனர். தெய்வ பக்தி மிகுந்த தற்போதைய சபாநாயகர், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் தனது மனசாட்சியுடன் அவர்களைத் தகுதி நீக்கம் செய்து நியாயமான முடிவை எடுப்பார் என நம்புகிறோம்" என்றார். மேலும், எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பதாகக் கூறப்படும் விமர்சனங்கள் அடிப்படையற்றவை என மறுத்த அவர், 'நமது அம்மா' நாளிதழில் இருந்து பொதுச்செயலாளர் இபிஎஸ் பெயரை நீக்கிவிட்டு, எஸ்பி. வேலுமணி பெயரைச் சேர்த்துள்ளது மிகச் சிறுபிள்ளைத்தனமான செயல் என்றும் சாடினார்.

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பின்னால் இருக்கும் மாபெரும் பின்னணி குறித்துப் பேசிய ஆதி ராஜாராம், தமிழக அரசுக்கு எதிராகப் பரபரப்புக் குற்றச்சாட்டை வீசினார். "தமிழ்நாட்டில் கேசினோ (Casino) எனப்படும் சூதாட்ட கிளப்புகளைத் திறக்க சில ரகசியத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை மக்களிடம் இருந்து திசை திருப்பி மறைப்பதற்காகவே, தற்போது அதிமுகவுக்குள் குழப்பத்தை உருவாக்கி ஒரு போலி நாடகத்தை சிலர் அரங்கேற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் கேசினோக்களை அமைக்கும் முயற்சியை முன்னெடுத்தது யார்? யாருக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது? என்பது குறித்துப் பத்திரிகையாளர்கள் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்தான் நேரடியாகக் கேள்வி எழுப்ப வேண்டும்" என்று கூறி அரசியல் வட்டாரத்தில் புதிய வெடியைப் பற்ற வைத்துள்ளார். ஆதி ராஜாராமின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டும், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகளும் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.

இதையும் படிங்க: "தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம்": இபிஎஸ் எச்சரிக்கையை மீறி சி.வி.சண்முகம் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share