இபிஎஸ் பேச்சை கண்டுகொள்ளாத மா.செ-க்கள்!! அதிமுகவில் நிலவும் அதிருப்தி! சுணங்கும் தேர்தல் பணி!
'பூத் கமிட்டி' அமைக்கும் பணிகளை கூட முடிக்காமல், மாவட்டச்செயலர்கள் முடங்கி கிடப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற சூழலில், அ.தி.மு.க.வில் அடிப்படை அமைப்புப் பணிகள் கூட முடியாமல் இருப்பது கட்சித் தலைமையை கடும் கோபத்துக்குள்ளாக்கியுள்ளது. குறிப்பாக, பூத் கமிட்டி அமைக்கும் பணி பெரும்பாலான மாவட்டங்களில் முடங்கிக் கிடப்பதால், பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி அதிருப்தியில் உள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கு முன்பே பழனிசாமி பூத் கமிட்டி அமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். ஒவ்வொரு பூத் அளவிலும் 9 பேர் கொண்ட நிரந்தர கமிட்டி அமைக்க உத்தரவிட்டார். அதில் 2 இளைஞர்கள், 3 மகளிர் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கடந்த ஜூன் மாதமே சட்டசபை தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை முடிக்குமாறு மாவட்டச் செயலர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு மாதமும் மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடத்தி ஆய்வு செய்தார். ஆனால் தற்போது தேர்தல் அறிவிப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில், 32 அமைப்பு மாவட்டங்களில் (திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திண்டுக்கல், ராமநாதபுரம், தேனி, திருச்சி, தஞ்சாவூர், கடலூர், நீலகிரி, திருப்பூர், கரூர், திருவண்ணாமலை, வேலூர், சென்னை உள்ளிட்டவை) 60 சதவீத பூத் கமிட்டிகள் கூட அமைக்கப்படவில்லை.
இதையும் படிங்க: கண்டுக்காத ஓபிஎஸ்..!! மீண்டும் அதிமுகவுடன் கைகோர்த்தார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி..!!
அதேபோல், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நடத்தப்பட்ட “விடியா ஆட்சிக்கு வீட்டுப் பில் சாட்சி” பிரசாரத்தில் தலா 2000 பேரைக்கூட சந்திக்காத மாவட்டச் செயலர்கள் உள்ளனர். மகளிர் தினத்தன்று விநியோகிக்க அனுப்பப்பட்ட இரண்டு துண்டு பிரசுரங்களை பல மாவட்டச் செயலர்கள் கண்டுகொள்ளவே இல்லை.
இந்தத் தகவல்கள் பழனிசாமிக்கு சென்றதும், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்களை அழைத்து கண்டித்துள்ளார். ஆனால் அவர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கட்சி அமைப்புச் செயலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு ஒரு முக்கிய காரணம், லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பிறகு செயல்படாத மாவட்டச் செயலர்களை மாற்ற வேண்டும் என்று தலைமைக் கழக நிர்வாகிகள் பலமுறை வலியுறுத்தியும், பழனிசாமி “மாற்றினால் தனக்கு எதிராக திரும்பிவிடுவார்கள்” என்ற பயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான். இதன் விளைவைத் தான் தற்போது தேர்தல் நெருக்கத்தில் சந்தித்து வருகிறார் என்று அ.தி.மு.க. அமைப்புச் செயலர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் சூழலில், அடிப்படை அமைப்புப் பணிகள் கூட முடியாத நிலை கட்சியின் வெற்றி வாய்ப்பை பெரிதும் பாதிக்கும் என்ற அச்சம் கட்சியினரிடையே நிலவுகிறது. பழனிசாமி தற்போது கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!