தொடைநடுங்கி யார்? தெம்பு, திராணி இருக்கா? முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அதிமுக சவால்!
'சட்டசபை நிகழ்வுகளை முழுதாக நேரலை செய்ய, முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா' என, அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் கடும் சர்ச்சை வெடித்துள்ளது. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அல்லது ரகுபதி போன்றோர் பேசியது அதிமுகவுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிரடி அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினையும், திமுக அமைச்சர்களையும் கடுமையாக சாடியுள்ளது. அறிக்கையில், “எடப்பாடி பழனிசாமியின் பதிலடி முதல்வர் ஸ்டாலினை கதற வைத்துவிட்டது போலும். வழக்கம்போல அமைச்சர் ரகுபதியை ஏவிவிட்டு, பதில் தருகிறேன் என்ற பெயரில் புலம்பித் தள்ளியுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ரகுபதி மீது கடும் தனிப்பட்ட தாக்குதலை நடத்தியுள்ள அதிமுக, “ரகுபதிக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை. அதிமுகவிடம் எத்தனை அடி வாங்கினாலும் ‘இன்னும் கொஞ்சம் அடியுங்களேன்’ என்று தானாக வண்டியில் ஏறுவதே வேலையாக மாறிவிட்டது” என்று ஏளனமாக விமர்சித்துள்ளது. மேலும், “வேட்டியை மாற்றியதும் கொள்கையைத் தூக்கி எறியும் அமைச்சர் ரகுபதி போன்றோர் இருக்கும் திமுக இப்படித்தான் இருக்கும்” என்று கடுமையாகச் சாடியுள்ளது.
இதையும் படிங்க: 4 மாசம் தான் இருக்கு! நல்லாட்சி நடத்துங்க! அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அட்வைஸ்!
கள்ளக்குறிச்சி சம்பவத்தை மீண்டும் கிளப்பியுள்ள அதிமுக, “அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி அடிக்கல் நாட்டிய கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தைத்தான் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ஆனால், திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால் கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தபோது, அங்கு செல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இல்லாமல் ஓடி ஒளிந்துவிட்டார்” என்று குற்றம்சாட்டியுள்ளது.
“அப்போதெல்லாம் ஒளிந்துகொண்டு, இப்போது தேர்தல் ஜுரத்தில் மேடை போட்டு காலரைத் தூக்கிவிட்டு பேசுவதற்கு கொஞ்சம்கூட வெட்கமில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அதிமுக, அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், சேலம் புதுப்பிக்கப்பட்ட பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றுக்கு கருணாநிதி பெயரை கூச்சமின்றி ஸ்டிக்கர் ஒட்டிய திமுகவினர், அதிமுக சாதனைகள் பற்றி பேச தகுதியில்லை என்று விளாசியுள்ளது.
கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கவில்லை என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அதிமுக, “இது திமுக கூடாரத்தில் எவ்வளவு பெரிய முட்டாள்கள் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது” என்று கிண்டலடித்துள்ளது.
இறுதியாக, அதிமுக விடுத்துள்ள மிகப்பெரிய சவால்: “முதல்வர் ஸ்டாலினுக்கு தெம்பும் திராணியும் இருந்தால், சட்டசபை நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் காட்டச் சொல்லுங்கள். நேருக்கு நேர் நின்று பேசுபவர் யார்? சபாநாயகர் பின்னால் ஒளிந்துகொள்ளும் தொடைநடுங்கி யார்? என்பதை தமிழக மக்களும் பார்த்து ரசிப்பர்; சிரிப்பர்” என்று தைரிய சவால் விடுத்துள்ளது.
இந்த அறிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை நேரலை கோரிக்கை ஏற்கனவே பலமுறை எழுந்திருந்த நிலையில், அதிமுகவின் இந்த கடும் தாக்குதல் திமுகவுக்கு புதிய தலைவலியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கதவை உடைத்து தூக்கிய போலீஸ்! அசால்டாக வெளியே வந்த சவுக்கு சங்கர்!! வைரலாகும் வீடியோ!