சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒன்றிணையுமா அதிமுக? அமித்ஷாவுடன் இன்று எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை!
திருச்சியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவை இன்று எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல்.வெளியாகியுள்ளது.
தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாக, திருச்சியில் தங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு நேற்று இரவு திருச்சி வந்தடைந்த அமித்ஷா, அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கியுள்ளார். இன்று காலை அவரை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அதிமுக மற்றும் பாஜக இடையே மீண்டும் வலுவான கூட்டணி அமைப்பது குறித்துப் புதுக்கோட்டை மேடையிலேயே அமித்ஷா பச்சைக்கொடி காட்டியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. தொகுதி உடன்பாடு, கூட்டணியில் இணையவுள்ள புதிய கட்சிகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, திமுக அரசை வீழ்த்த அதிமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் ஒரு ‘மாஸ்டர் பிளான்’ ஆகப் பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் தற்போது முடிவுக்கு வந்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை இந்த நிகழ்வு உறுதி செய்கிறது.
இதையும் படிங்க: “திமுக கொடுத்தது பொய் வாக்குறுதி.. மோடி கொடுத்தது 11 லட்சம் கோடி!” புள்ளிவிவரங்களுடன் திமுக-வை விளாசிய அமித்ஷா!
இந்தச் சந்திப்பின் போது, சட்டமன்றத் தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் இழுபறிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம். குறிப்பாக, தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலத்தில் தங்களுக்குச் செல்வாக்குள்ள தொகுதிகளைப் பெறுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம், அதிமுக தனது தலைமையிலான கூட்டணியில் கூடுதல் தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள முனைப்பு காட்டி வருகிறது. இதுமட்டுமன்றி, தற்போது கூட்டணியில் இல்லாத சில முக்கியக் கட்சிகளை உள்ளே இழுப்பது குறித்தும், அவர்களை எப்படிச் சரிக்கட்டுவது என்பது குறித்தும் அமித்ஷாவுடன் எடப்பாடியார் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக-வின் இந்தச் சந்திப்பு குறித்துத் திமுக தரப்பு மிகுந்த உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. "ஊழல் ஊழல் எனப் பேசும் அமித்ஷா, தற்போது யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்ப்பார்கள்" எனத் திமுக நிர்வாகிகள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில் வேட்பாளர் நேர்காணல் தேதிகள் மாற்றப்பட்டிருப்பதற்கும், இந்தச் சந்திப்பிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்திலும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்தச் சந்திப்பு உறுதியானால், வரும் நாட்களில் தமிழக அரசியலில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறுவது உறுதி என்று அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “பாஜக-அதிமுக கூட்டணி 2026-ல் ஆட்சியைப் பிடிக்கும்!” - 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' நிறைவு விழாவில் அமித்ஷா சூளுரை!