அமித்ஷாவின் புதுச்சேரி பயணம் திடீர் ரத்து.! நீட் போராட்டம் எதிரொலி? அதிகாரிகள் கூறியது என்ன?
அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் மற்றும் அடுத்தகட்ட பயணத் திட்டம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுச்சேரி வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது வழங்கும் விழாவில் பங்கேற்க அவர் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறையின் நீண்ட கால சிறப்பான சேவை, ஒழுக்கம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பில் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் உயரிய வண்ண விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவலர் மைதானத்தில் வரும் சனிக்கிழமை மாலை நடைபெற இருந்தது.
இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புதுச்சேரி காவல்துறைக்கு விருதை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.
இதையும் படிங்க: வந்தே மாதரம் பாடலை இழிவுபடுத்தினால் 3 ஆண்டுகள் சிறை! தேசியக் கொடிக்கு இணையான அந்தஸ்து! இன்று முக்கிய மசோதா!
இந்த நிலையில், அமித்ஷாவின் புதுச்சேரி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை. மேலும், மாற்று தேதி குறித்த தகவலும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், டெல்லியில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து Cockroach Janata Party (CJP) உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணியில் ஏற்பட்ட மோதல் அரசியல் ரீதியாக பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை தீவிரமாக முன்வைத்து வருகின்றன.
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களின் காரணமாகவே அமித்ஷாவின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனை மத்திய அரசு அல்லது உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
அமித்ஷாவின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் மற்றும் அடுத்தகட்ட பயணத் திட்டம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் கனமழை கொடூரம்... 11 பேர் பலி; முதல்வருடன் அமித் ஷா அவசர ஆலோசனை!