2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!
டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தரும் அமித்ஷா இன்று இரவு திருச்சியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் ஓய்வெடுக்கிறார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜகவின் தேர்தல் வியூகங்களை வலுப்படுத்தும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு வருகிறார். இன்று (பிப்ரவரி 13) இரவு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் அவர், திருச்சியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளை (பிப்ரவரி 14) காலை திருச்சி விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் புறப்பட்டுச் செல்கிறார். காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் காரைக்கால் நகராட்சி திடலுக்கு செல்கிறார்.
அங்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு முக்கிய உரையாற்ற உள்ளார். இந்தக் கூட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிரான கடுமையான விமர்சனங்களும், தமிழக-புதுச்சேரி மக்களுக்கு பாஜக-அ.தி.மு.க. கூட்டணி அளிக்கும் வாக்குறுதிகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பிப்.,14-ல் தமிழகம் வருகிறார் அமித்ஷா?! பாஜக மையக்குழு கூட்டம்! எடுக்கப்போகும் முக்கிய முடிவு?
காரைக்கால் பகுதியில் பெருமளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பும் அமித் ஷா, அங்கிருந்து விமானம் மூலம் சேலம் செல்கிறார். சேலத்தில் நடைபெறும் பாஜக மத்தியக்குழு கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்ற உள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜகவின் தேர்தல் தயாரிப்புகள், தொகுதி பங்கீடு, வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெறும். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பியூஸ் கோயல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் திருச்சியில் முகாமிட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, இந்த சுற்றுப்பயணத்தின் மூலம் தி.மு.க.வை வீழ்த்தும் வலுவான திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி, அமித் ஷா போன்ற தலைவர்களின் தொடர் பயணங்கள் கட்சி தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. தேர்தல் களத்தில் பாஜகவின் இந்த ஆக்ரோஷமான அணுகுமுறை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மோடி கொடுத்த டாஸ்க்! ஆபரேஷனில் இறங்கிய அமித்ஷா!! 2 நாள் தமிழக வருகை! காத்திருக்கும் முக்கிய ட்விஸ்ட்!