அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!
''விரைவில் அ.ம.மு.க., பொதுக் குழுவை கூட்டி, கட்சி என்னிடம் தான் இருக்கிறது என்பதை நிரூபிப்பேன்,'' என, அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ., காமராஜ் அறிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அமமுக) ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல் தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், விரைவில் பொதுக்குழுவை கூட்டி கட்சி தன்னிடமே இருப்பதை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுக இடம்பெற்றது. அக்கட்சி சார்பில் 11 தொகுதிகளில் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் மட்டும் வெற்றி பெற்றார்.
தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவிப்பதாக காமராஜ் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்த முடிவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். கட்சித் தலைமையின் அனுமதி இல்லாமல் காமராஜ் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டிய தினகரன், அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: சீருடைப் பணியாளர் ஆணையத்தின் அறிவிப்பு ஏமாற்றம்..! டிடிவி தினகரன் அதிருப்தி.!
மேலும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, காமராஜை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் காமராஜ் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். “பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் யாரிடம் உள்ளனரோ, அவர்களிடமே கட்சி இருக்கும்” என்று கூறிய அவர், மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை சுட்டிக்காட்டி, அதேபோன்ற சூழல் இங்கும் உருவாகும் என தெரிவித்தார்.
மேலும், விரைவில் அமமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, கட்சி தன்னிடமே இருப்பதை நிரூபிப்பேன் என்றும் அவர் கூறினார். தினகரனை நம்பி வந்த பல முன்னாள் நிர்வாகிகள் தற்போது அரசியல் ரீதியாக சிரமத்தில் இருப்பதாகவும் காமராஜ் விமர்சித்தார்.
கடந்த காலத்தில் நடைபெற்ற அமமுக பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதில் தானும் சிலரும் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்ட காமராஜ், பொதுக்குழுவை கூட நடத்த முடியாதவர்கள் கட்சியை எப்படி நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
காமராஜின் இந்த பேட்டி அமமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினகரன் தலைமையிலான அமமுகவில் நிலவும் உள்கட்சி பிரச்னை மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தவெகவை வீழத்த திமுக - அதிமுக இணைவதில் தவறில்லை!! விஜய் பண்ணது மட்டும் நியாயமா? டிடிவி தினகரன் கேள்வி!