ஒரு மாசமா மன உளைச்சல்; தூக்கம் இல்லை.. பொதுக்கூட்டத்தில் புலம்பி தள்ளிய அன்புமணி!!
தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி கடத்தூர் பகுதியில் பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, எதற்காகவும் நீங்கள் குழம்ப வேண்டாம். நம்முடைய இயக்கம் ஒரே இயக்கம். நமக்கு இலக்கு இருக்கிறது. நம் கட்சிக்கு 35, 36 வயதாகிவிட்டது. யார் யாரோ ஆட்சிக்கு வந்துவிட்டனர். நாம் வர முடியவில்லை. நிச்சயம் நாம் வருவோம். கடந்த ஒரு மாதமாக எனக்கு பயங்கர மன உளைச்சல். தூக்கம் இல்லை.
எனக்குள் தினம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னடா நான் தப்பு பண்ணேன். தூங்குவதற்கு முன்பு இதுதான் மனதில் ஓடும். தூங்கி எழுந்த பிறகும் என்ன நான் தப்பு பண்ணேன் என்ற கேள்வி தான் எழுகிறது. ஏன் நான் மாற்றப்பட்டேன். என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை.
ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இதுநாள் வரை மருத்துவர் ராமதாஸ் சொல்வதைத்தான் கேட்டு வந்தேன். இனியும் மகனாக, கட்சியின் தலைவராக அவர் சொல்வதை செய்து முடிப்பேன். அது என் கடமை. ராமதாஸின் கனவை நிறைவேற்ற பாமக தலைவராக தொடர்ந்து செயல்படுவேன். அவரின் லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் என்னுடைய கனவு. அதைவிட வேறு என்ன இருக்கிறது. சமுதாயம் முன்னேறினால் தமிழ்நாடு முன்னேறும் என்பதுதான் நம் இலக்கு. கேரளாவில் ஈழவர் சமுதாயம் என்பது தனிப்பெரும் சமுதாயம். அவர்களுக்கு அங்கு 14 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. தமிழ்நாட்டில் வன்னியர் தனிப்பெரும் சமுதாயம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க: கொள்ளையடிக்கிறது தான் திராவிட மாடல் சாதனையா? கடுமையாக விளாசிய அன்புமணி!!
நேற்று கூட திமுகவின் முக்கிய நபர் அவரின் மகன் திருமணத்துக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தார். மாநாட்டில் பார்த்தோம். நீங்கள் சொல்லும்வரை புரியவில்லை. இந்த சமுதாயம் இவ்வளவு பின் தங்கியுள்ளது என்பதற்கு நிறைய உதாரணங்கள் சொன்னீர்கள். காவல்துறையில் 109 பேர் உயரதிகாரிகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே வன்னியர். எம்பிசி வந்து 36 வருடங்கள் ஆகிவிட்டன. இதில் ஒரே ஒரு வன்னியர் தான் காவல்துறையில் உயர் அதிகாரியாக வந்துள்ளார். இதுதான் சமூக நீதியா. அரசு 10 சதவீதம் வந்துவிட்டனர் 12 சதவீதம் வந்துவிட்டனர் என்று பொய் தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறது. இது ஒன்றுபோதும்.
எம்பிசியில் 10 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுத்திருந்தால், இந்நேரம் குறைந்தது 10 பேர் இந்த சமுதாயத்தில் இருந்து டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி போன்ற உயரதிகாரிளாக வந்திருப்பார்கள். நமக்கு 20 சதவீதத்தில் 1 சதவீதம் தான் ஒதுக்கீடு கிடைக்கிறது. இதற்கு தான் உயர் நீத்து தியாகம் செய்தார்களா. ஒரே வாரத்தில் 21 பேர் உயர் நீத்தனர். ஒரு மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியவர்களுக்கு ஆட்சிக்கு வர முடியாதா. எங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு, வேலை கொடுத்தது தப்பா.
எங்கள் குடும்ப பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். மற்றவர்களின் தலையீடு எதுவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் பாமக ஆட்சியை பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. திட்டமிட்டு ஆட்சியை பிடிப்போம். எப்படி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நாங்கள் எல்லாம் பார்த்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம்... தமிழக அரசை விளாசிய அன்புமணி!!