தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை! அண்ணாமலை ட்விஸ்ட்! கடிதத்தில் சொன்ன பகீர் தகவலால் அதிர்ச்சி!!
'தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என, கட்சி தலைமைக்கு ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து விட்டேன்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தமிழக பா.ஜ. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டசபைத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பா.ஜ. தேசியத் தலைவர் நிதின் நட்டாவுக்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
மார்ச் 25ஆம் தேதி எழுதிய அந்தக் கடிதத்தில் அண்ணாமலை, “தொகுதி பங்கீட்டின்போது சிறிய கட்சிகளுக்கு முதலில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள தொகுதிகளை தேசியக் கட்சியான பா.ஜ.வுக்கு ஏற்க நிர்பந்திக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. இது, பல ஆண்டுகால போராட்டத்தால் கட்சியை கட்டியெழுப்பிய தொண்டர்களின் கண்ணியத்தை காயப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “எளிதில் வெற்றி பெறக்கூடிய தொகுதிகளுக்கு பதிலாக, தி.மு.க.வின் கோட்டையான திருச்செந்தூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராதாபுரம், ராசிபுரம், பத்மநாபபுரம், ஆவடி உள்ளிட்ட தொகுதிகள் பா.ஜ.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் ரீதியாக நியாயமானதா என்ற சந்தேகத்தை தொண்டர்களிடையே ஏற்படுத்தியுள்ளது” என்றும் அவர் எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தலுக்காக பலிகடா ஆக்காதீர்கள்!! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை கொடுத்த வார்னிங்!
கோவையில் தான் விரிவாக களப்பணியாற்றியும், பா.ஜ.வுக்கு கோவை வடக்கு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் போன்ற சாதகமான தொகுதிகள் வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். “சிங்காநல்லூரில் நான் போட்டியிட தயாராக இருந்தேன். ஆனால் வேண்டுமென்றே வாய்ப்பு மறுக்கப்பட்டதா?” என்ற கேள்வியை பல தொண்டர்களும் எழுப்புவதாக அவர் குறிப்பிட்டார்.
பல்லடம், பழனி போன்ற சாதகமான தொகுதிகள் தவறவிடப்பட்டதையும், தனது சொந்த மாவட்டமான கரூரில் ஒரு தொகுதிகூட பா.ஜ.வுக்கு ஒதுக்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “இந்தச் சூழலில் சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். இது பயம் காரணமல்ல. தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதற்கு எதிரான எனது நிலைப்பாடு” என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
கடிதம் எழுதிய அதே மார்ச் 25ஆம் தேதிதான் அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதி விவரங்களை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையின் இந்தக் கடிதம் பா.ஜ.வுக்குள் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை அவர் நேரடியாக வெளிப்படுத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுப்பு? பாஜகவுக்கு பின்னடைவா? கோவையில் சறுக்குமா? சாதிக்குமா? தேஜ கூட்டணி!