2 மின்தூக்கி அமைக்க ரூ.3.55 கோடியா? சுவாமிமலையில் ஊழல்! கறாராக கணக்கு கேட்கும் அண்ணாமலை!!
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், புதிதாக இரண்டு மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடி செலவிடப்பட்டிருப்பது குறித்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில், பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட இரண்டு மின்தூக்கிகள் (லிப்ட்) தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பாஜக மாநில முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இதற்காக ரூ.3.55 கோடி செலவிடப்பட்டும் மின்தூக்கிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
சுவாமிமலை கோயில் சுமார் 60 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வயதான பக்தர்கள் 60 படிகளை ஏறுவது சிரமம் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மின்தூக்கி அமைக்கும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களின் காணிக்கை நிதியிலிருந்து ரூ.3.55 கோடி செலவில் தலா 20 பேர் பயணிக்கக்கூடிய இரண்டு மின்தூக்கிகள் அமைக்கப்பட்டன. இவை எஃகு கட்டமைப்பில் கட்டப்பட்டு, கோயிலுடன் நடைபாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த மின்தூக்கிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், திறப்பு விழாவின்போது மின்தூக்கிகள் சரியாக இயங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் சேகர்பாபு, மின்தூக்கியை இயக்குபவரை முதுகில் அறைந்த சம்பவம் நடந்ததாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இப்போ என்ன பதில் சொல்லப்போறீங்க ஸ்டாலின்?! அமலாக்கத்துறை வளையத்தில் கே.என்.நேரு!! அண்ணாமலை விளாசல்!
இதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, "ரூ.3.55 கோடி செலவு செய்தும், இரண்டு ஆண்டுகளாக பணி நடந்தும் மின்தூக்கி வேலை செய்யவில்லை என்றால், இதில் எவ்வளவு ஊழல் நடந்திருக்கும்? வயதான பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட மின்தூக்கியில்கூட கமிஷன் அடித்திருக்கிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 20 பேர் எடையை தாங்கும் என கூறப்பட்டாலும், 10 பேரைக்கூட தாங்க முடியாத நிலை இருந்தால் தரம் குறித்து சந்தேகம் எழுவதாகவும், வயதான பக்தர்கள் எப்படி நம்பி பயணிப்பார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
உடனடியாக இரண்டு மின்தூக்கிகளுக்கும் தரப் பரிசோதனை செய்து அறிக்கை வெளியிட வேண்டும். ஒவ்வொரு மின்தூக்கியும் உண்மையில் 20 பேரை தாங்கும் சக்தி கொண்டதா என்பதை பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ரூ.3.55 கோடிக்கான முழு கணக்குகளை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டு சுவாமிமலை கோயில் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகம் மற்றும் அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தமிழகத்தில் கோயில் நிர்வாகத்தில் ஊழல் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கோயில் பணியிடத்தை நிரப்புவதில் முறைகேடு! கல்லா கட்டிய கட்சி நிர்வாகிகள்! அமைச்சர் ஷாக்!