திருப்பரங்குன்றம் தீப விவகாரம் "சிறுபான்மையினரை தாஜா செய்யும் திமுக" அண்ணாமலை ஆவேசம்!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்து மத மோதலைத் தூண்டும் முயற்சியில் திமுக ஈடுபடுவதாகப் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தீபத்தூண் விவகாரம் தொடர்பாக, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் தி.மு.க. அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அவமதித்து மத மோதலைத் தூண்டும் முயற்சியில் தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
உயர்நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான அனுமதி உத்தரவை டிசம்பர் 1-ஆம் தேதியே வழங்கியிருந்த போதிலும், டிசம்பர் 3 வரை எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லையெனக் கூறி, அண்ணாமலை தமிழக அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்தார். கோயில் சொத்துகளைப் பாதுகாக்கும் முக்கியப் பொறுப்பில் உள்ள செயல் அலுவலரே ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? அரசின் உட்புற வற்புறுத்தலால்தான் அவர் இப்படியொரு விவகாரத்தில் தலையிட்டுள்ளார் என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார்.
மேலும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என யாரும் கோரவில்லை என்றும், மலை உச்சியில் தீபத்தூண் இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி பொய்ப் பிரசாரம் செய்வதாக அவர் எதிர்த்தாக்குதல் நடத்தினார். தர்காவைத் தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்து சமுதாய மக்களுக்குச் சொந்தமானதுதான் என்றும், இதில் சிக்கந்தர் தர்கா மற்றும் படிகள் உள்ளிட்ட மூன்று இடங்கள் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரியது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். தர்கா சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், கோயில் செயல் அலுவலர் மனு தாக்கல் செய்தது ஏன் என்ற நியாயமான கேள்வியை அவர் முன்வைத்தார்.
இதையும் படிங்க: தீபத் தூண் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இரவு விசாரணை இல்லை; இன்று தனி நீதிபதி விசாரணை!
நாடாளுமன்ற விவாதப் பொருள் ஆக்கப்படும் அளவுக்கு இந்த விவகாரத்தைத் திமுக எம்.பி.க்கள் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, “நீதிமன்ற உத்தரவை ஏற்க வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்குத் தெரியாதா? மாநிலத்திற்குத் தேவை வளர்ச்சியா அல்லது அரசியல் வளர்ச்சியா? முதலமைச்சர் ஸ்டாலின் உண்மையில் அனைவருக்குமான முதல்வரா?” என அடுத்தடுத்து தொடர் கேள்வி எழுப்பினார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேற்று நடந்த சந்திப்பின்போது, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்துத் தமிழக பா.ஜ.க. சார்பில் முழு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் அண்ணாமலை கூறினார். மேலும், 144 தடை உத்தரவு என்பது மோசடி என்று சாடிய அவர், தடை உத்தரவு அமலில் இல்லாதபோதும் கூட நயினார் நாகேந்திரன் மற்றும் எச். ராஜா கைது செய்யப்பட்டது ஏன் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக அரசு அடாவடி! நீதிமன்ற உத்தரவை மீறி நயினார், எச். ராஜா கைது: அண்ணாமலை கண்டனம்!