யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள்! நிறைய பணம் கைமாறி இருக்கு! GEM வீரமணி வழக்கில் அண்ணாமலை அதிரடி!
வழக்கில் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் விசாரணையை நிறுத்தாமல், பல ஆண்டுகளாக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
GEM கிரானைட்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர். வீரமணி மீதான போக்சோ வழக்கு விசாரணை தொடர்பாக, வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கேள்விகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கில் நடந்ததாக கூறப்படும் அனைத்து விவகாரங்களையும் முழுமையாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் வீடியோ தொடர்பாக கடந்த ஆண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆரம்பகட்ட விசாரணையில் சிறுமியை அடையாளம் காண முடியவில்லை உள்ளிட்ட காரணங்களால் வழக்கை முடிக்க போலீசார் அறிக்கை தாக்கல் செய்த நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதனை ஏற்க மறுத்து மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து விசாரணை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடைய சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், இந்த வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சில பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: லண்டன் பயணம் தேவையா? முதல்வர் விஜய்க்கு அண்ணாமலை கேள்வி! மதுரையில் பரபரப்பு பேச்சு!
இந்நிலையில், வீரமணியின் முன்னாள் ஊழியர் கணேசன் என்பவரையும் போலீசார் செப்டம்பர் 22-ம் தேதி கைது செய்தனர். அவரது செல்போனில் வழக்குடன் தொடர்புடையதாக கூறப்படும் வீடியோ இருந்ததாகவும், அது தொடர்பாக உரிய தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் பணப் பரிமாற்றங்கள் குறித்த தகவல்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில் அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, வழக்கில் வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் விசாரணையை நிறுத்தாமல், பல ஆண்டுகளாக அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் நபர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், வழக்கில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர், உண்மை நிலையை கண்டறிய உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரத்தில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், குறிப்பாக சம்பவம் நடந்தபோது சிறார்களாக இருந்தவர்களின் பாதுகாப்பும் கண்ணியமும் எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அரசியல் இயக்கமாகிறது வீ தி லீடர்ஸ்! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு! அரசியல் களத்தில் குதிக்கும் இளைஞர்கள்!