உள்ளாட்சி தேர்தலை குறிவைக்கும் அண்ணாமலை... கட்சி பெயர், கொடி, ரெடி! செப்டம்பரில் பிரம்மாண்ட மாநாடு?
வீ த லீடர்ஸ் இயக்கத்தை கட்சியாக மாற்ற அண்ணாமலை முடிவு செய்துள்ளார். கட்சி பெயர், கொடியை தயார் செய்துள்ள நிலையில், செப்டம்பரில் முதல் மாநாட்டை நடத்தவுள்ளாராம்.
தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறும் நிலையில், பாஜகவில் இருந்து விலகி 'வீ த லீடர்ஸ்' என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலை, அதை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய கட்சியின் பெயர், கொடி மற்றும் அமைப்பு தொடர்பான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாகவும், செப்டம்பர் மாதத்தில் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலத்தில் அண்ணாமலை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய தலைவராக இருந்தாலும், தேர்தல் வெற்றியாக அது மாறவில்லை. அதன் பின்னர் கட்சியின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்தது.
இதையும் படிங்க: ஒரே நாளில் குறைந்தது வேகம்! நிர்வாகிகள் இல்லாமல் தடுமாறும் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு! அண்ணாமலைக்கு சவால்!
சட்டமன்றத் தேர்தலிலும் அவர் போட்டியிடாமல் இருந்ததுடன், தேர்தல் பிரசாரத்திலும் குறைந்த அளவிலேயே ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் பாஜகவிலிருந்து விலகி தனி அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அண்ணாமலை தொடங்கிய 'வீ த லீடர்ஸ்' இயக்கத்திற்கு தொடக்கத்திலேயே கணிசமான ஆதரவு கிடைத்ததாக கூறப்படுகிறது. இணையம் மற்றும் நேரடி முகாம்கள் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்ற நிலையில், இயக்கத்தின் முதல் பெரிய மாநாடு சமீபத்தில் பொள்ளாச்சியில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. தற்போது அந்த இயக்கத்தை முழுமையான அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, வருகிற ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மதுரை அல்லது திருச்சியில் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கட்சியின் ஆதரவை விரிவுபடுத்தும் நோக்கில் மாநாட்டு இடம் தேர்வு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்தத் தகவல்கள் தொடர்பாக அண்ணாமலை அல்லது அவரது இயக்கம் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. எனினும், உள்ளாட்சி தேர்தல் மற்றும் எதிர்கால இடைத்தேர்தல்களை இலக்காக வைத்து புதிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. புதிய கட்சி அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், தமிழக அரசியலில் மேலும் ஒரு முக்கிய மாற்றம் நிகழலாம் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஏன் இவ்வளவு தாமதம்.? பொறுப்புக் கூறல் எங்கே.? வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்... அண்ணாமலை சரமாரி கேள்வி..!!