×
 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ என்ட்ரி... தடை நீங்கியதால் மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை!

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் அரசியல் பிரமுகர்கள் சிலருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. இந்த வழக்கை கையில் எடுக்க இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் சிபிஐ விசாரணைக்கான சட்டத் தடை நீங்கியுள்ளதால், விரைவில் மத்திய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை முழுமையாக கையில் எடுக்க உள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை பெரம்பூர் பகுதியில் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் செம்பியம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி 27 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் வடசென்னை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடல்நலக்குறைவால் சிறையில் உயிரிழந்தார். மற்ற குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கொலை வழக்கில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: #BREAKING: "CBI விசாரிக்கட்டும்"..! ஆம்ஸ்ட்ராங் Case-ல் Shock Move..! அதிரடி காட்டிய தமிழக அரசு..!!

மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டது. ஆனால், அப்போதைய தமிழக அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால், சிபிஐ விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தற்போதைய தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுள்ளது. இதன் மூலம் சிபிஐ விசாரணைக்கு இருந்த தடைகள் நீங்கியுள்ளன. விரைவில் செம்பியம் போலீசாரிடம் இருந்து வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐ அதிகாரிகள் பெற்று, முழுமையான விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த வழக்கில் அரசியல் பின்னணி உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதுவரை வெளிவராத தகவல்கள் மற்றும் புதிய ஆதாரங்கள் வெளிச்சத்துக்கு வரக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் கவனம் பெற்ற ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மீண்டும் முக்கிய திருப்பத்தை எட்டியுள்ளதாக அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பேசப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பச்சைக்கொடி... முதல்வர் விஜய்க்கு பொற்கொடி நன்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share