ஈரான் செல்லும் ஆசிம் முனீர்! அமெரிக்கா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய முயற்சி?
இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தூதரக முயற்சிகளில் ரஷியாவும் களமிறங்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் இன்று ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணம் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அதிகாரி ஒருவரையும் ஈரான் ஊடகங்களையும் மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவல்களின்படி, ஆசிம் முனீர் அக்டோபர் 20ஆம் தேதி தெஹ்ரானுக்குச் செல்கிறார். அங்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலைத் தணிக்க பாகிஸ்தான் இந்த ஆண்டு முழுவதும் மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதிலும், போர்நிறுத்தத்துக்கான வழிகளை ஆராய்வதிலும் பாகிஸ்தான் முக்கியப் பங்கு வகித்துள்ளது. இருப்பினும், பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை நீடிப்பதால் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிக்கல் நிலவுகிறது.
இதையும் படிங்க: அணு ஆயுதம் கிடையாது அதுக்கும் மேல... பயங்கரமான ஆயுதத்தை கையில் எடுத்த ஈரான்... அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேரழிவு...!
ஈரான் அண்மையில் ஹோர்முஸ் நீரிணையை ஏழு நாட்களுக்குள் மீண்டும் திறப்பதற்கான முன்மொழிவை அமெரிக்காவிடம் முன்வைத்துள்ளது. இதற்காக ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குவது, எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட நிபந்தனைகளையும் ஈரான் முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன.
இதற்கிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தூதரக முயற்சிகளில் ரஷியாவும் களமிறங்கியுள்ளது. ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் அக்டோபர் 19ஆம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்குச் சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துப் பேசினார். மோதலைத் தணிப்பதற்கான ராஜதந்திரத் தீர்வுகள் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் சுமுகமான முடிவை எட்டாத சூழலில், பாகிஸ்தானின் ஆசிம் முனீர் மேற்கொள்ளும் இந்தப் பயணம் கவனம் பெற்றுள்ளது. அவரது சந்திப்புகளுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படுமா, போர்ப் பதற்றம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!