×
 
☰

மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... புதுச்சேரி, மேற்குவங்கம், அசாமிலும் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது...!

6 தொகுதிகளில் தொடங்கியது இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரேஜிநகர், தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை முதலே பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பல வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தட்டாஞ்சாவடியில் பலத்த பாதுகாப்பு: 

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 31 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு 26,921 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க: "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!

வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய துணை ராணுவப் படையினர் மற்றும் போலீசார் என சுமார் 1,300-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமானதாகக் கண்டறியப்பட்டுள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படுகின்றன.

வாக்காளர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாகச் செல்லும் வகையில் சாய்வுதளப் பாதை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் என். ரங்கசாமி இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று, பின்னர் மற்றொரு தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டதால் தட்டாஞ்சாவடி தொகுதி காலியானது. இதையடுத்து இங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 

இந்தத் தொகுதியில் மொத்தம் 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் அசோக் ஆனந்த், காங்கிரஸ் சார்பில் ஈ. விநாயகம், திமுக சார்பில் கே. சேதுசெல்வம் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் ஆளும் NDA கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக தேர்தல் களம் அமைந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தீவிர கண்காணிப்பு: 

மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் ரேஜிநகர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரு தொகுதிகளிலும் மொத்தம் 605 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தேர்தல் பாதுகாப்புக்காக நந்திகிராம் மற்றும் ரேஜிநகர் தொகுதிகளில் மொத்தம் 71 கம்பெனி மத்தியப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதில் நந்திகிராமில் 37 கம்பெனியும், ரேஜிநகரில் 34 கம்பெனியும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, நந்திகிராமில் 700 மாநில போலீசாரும், ரேஜிநகரில் 819 மாநில போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பதற்றமான சூழல் ஏற்படாமல் இருக்க வாக்குச்சாவடிகளைச் சுற்றிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாதிரி வாக்குப்பதிவு நிறைவு செய்யப்பட்டது.

 நந்திகிராம் தொகுதி முதலமைச்சர் சுவேந்து அதிகாரி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று, பவானிபூரைத் தக்கவைத்துக்கொண்டு நந்திகிராம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் காலியானது.

நந்திகிராமில் பாஜக சார்பில் ஹசிராணி ரத் போட்டியிடுகிறார். அவரது மகன் சந்திரநாத் ரத், சுவேந்து அதிகாரியின் முன்னாள் நெருங்கிய உதவியாளராக இருந்தவர்; அவர் மே மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் தனது வேட்புமனுவைத் திரும்பப் பெற்ற நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதானுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.

ரேஜிநகர் தொகுதியில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ரேஜிநகர் மற்றும் நவ்தா ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ஹுமாயுன் கபீர், நவ்தா தொகுதியைத் தக்கவைத்ததால் ரேஜிநகர் தொகுதி காலியானது. இங்கு அவரது மகன் கோலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் போட்டியிடுகின்றனர். திரிணமூல் காங்கிரஸின் இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.

அசாமில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு:

அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

நாகோன் மக்களவைத் தொகுதியில் தேர்தலை சுமுகமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாகோன் மற்றும் மோரிகான் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து வாக்குப்பதிவு பாதுகாப்பாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மொத்தத்தில், ஆறு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அசாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற பிரத்யுத் போர்டோலாய், பின்னர் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து, 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் வெற்றி பெற்றார். இதனால் நாகோன் மக்களவைத் தொகுதி காலியானது.

இந்தத் தொகுதியில் பாஜக, காங்கிரஸ், AIUDF ஆகிய கட்சிகளுக்கு இடையே முக்கிய போட்டி நிலவுகிறது. நாகோனில் முஸ்லிம் வாக்காளர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், பாஜகவுக்கு இந்தத் தொகுதி சவாலானதாக இருக்கும் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், காங்கிரஸ் மீண்டும் தொகுதியை கைப்பற்றும் என்ற நம்பிக்கையை அக்கட்சியின் தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: "ஆட்சி ஆட்டம் காணும்"..! வீதி வீதியாக வாக்கு சேகரிக்கும் CM விஜய்... பழ. கருப்பையா விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share