ஆட்டோ ஓட்டுநருக்கு மாவுக்கட்டு...!! - இளைஞர் கால் மீது ஏறி இறங்கிய விஜய் பிரசார வாகனம்... செல்ஃபி எடுக்க முயன்ற போது விபரீதம்...!
நடிகர் விஜயை பார்க்க வந்து அவரது வாகனத்திலேயே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் பொதுக்கூட்டம், பரப்புரை மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்படி தங்களது ஊருக்கு விஜய் வரும் போது, அவருடைய வாகனத்தை பின்தொடர்ந்து வரும் தொண்டர்கள் விபத்துக்களில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இந்த சம்பவங்களை அடுத்து விபத்துக்கள் காரணமாக, தனது வாகனங்களைப் பின்தொடர வேண்டாம் என தவெக தரப்பில் இருந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ஏப்ரல் 10, 2026 அன்று மதுரை தேசிய நெடுஞ்சாலையில், காரைக்குடி நோக்கி சென்ற விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்த இளைஞர்களின் பைக், சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் ஏப்ரல் 19, 2026-ல், விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்த தவெக தொண்டர்கள், முன்னால் சென்ற வாகனத்தில் மோதிய சம்பவமும் பதிவாகியுள்ளது. செப்டம்பர் 2025-ல், கரூர் அருகே விஜய்யின் பிரசார வாகனம் மீது இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக, பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, செங்குன்றம் அருகே நடிகர் விஜய்யுடன் செல்பி எடுக்க முயன்ற ஆட்டோ ஓட்டுனர் கால் தவறி பிரச்சார வாகனத்தில் விழுந்து முன் சக்கரம் ஏறியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் திங்கட்கிழமை நடிகர் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்றார். இதற்காக நீலாங்கரையிலிருந்து புறப்பட்டு சுமார் 3மணி நேரத்திற்கு பிறகு ரோட் ஷோ நடைபெறும் இடத்திற்கு வந்து பின்னர் வில்லிவாக்கம், அண்ணா நகர் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: தன் வாழ்க்கையை மட்டும் உயர்த்திக்கொண்ட முதல்வர்..! கடனில் தமிழகம்..! விளாசிய விஜய்..!
ரோடு ஷோவில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் வந்தபோது வழி நெடுகிலும் அவரது ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜய் வாகனம் வந்தபோது செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரில் அலமாதி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரான்சிஸ் (25) பிரச்சார வாகனத்தின் முன் சென்று விஜயுடன் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது கூட்டத்தில் கால் தவறி கீழே விழுந்த நிலையில் விஜய்யின் பிரச்சார வாகனத்தின் முன் சக்கரம் பிரான்சிஸ் கால் மீது ஏறியது. இதில் காயமடைந்த பிரான்சிஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார்.
தொடர்ந்து எலும்பு முறிவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காயமடைந்த இளைஞனின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் விஜயை பார்க்க வந்து அவரது வாகனத்திலேயே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: உங்க சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா.? கரூர் சம்பவம் குறித்த மனம் திறந்த விஜய்..!!