×
 

காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்!! அடுத்த விக்கெட் வெல்லமண்டி நடராஜன்?! திமுக பக்கா ஸ்கெட்ச்!

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது திமுகவில் இணைகிறார்.

தமிழக அரசியல் களத்தில் அதிரடி நிகழ்வு ஒன்று இன்று (ஜனவரி 21, 2026) நடைபெற்றுள்ளது. அதிமுகவின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆதரவாளருமான வெல்லமண்டி நடராஜன் இன்று திமுகவில் இணைய உள்ளார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் திமுக கொடியேற்று கட்சியில் இணைய உள்ளார். முன்னதாக ஒரத்தநாடு எம்எல்ஏ வைத்திலிங்கம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு இன்று திமுகவில் இணைந்தார். குன்னம் தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் திமுகவில் இணைய உள்ளார். 

வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர். திருச்சி மாநகர் மாவட்ட அவைத்தலைவராகவும், பின்னர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 

இதையும் படிங்க: கரூர் விவகாரத்தில் சிலர் மீது சந்தேகம்!! சிபிஐ விசாரணையில் பற்ற வைத்த விஜய்!! கசிந்தது புது தகவல்!

2021 தேர்தலில் தனது மகனுக்கு சீட் கேட்டு கட்சித் தலைமையை அணுகியும், எடப்பாடி பழனிசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தானே போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2022-இல் அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்ததால் எடப்பாடி பழனிசாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் தலைமையிலான 'அதிமுக உரிமை மீட்புக் குழு'வில் முக்கிய பங்காற்றினார். திருச்சியில் ஓபிஎஸ் நடத்திய மாநாட்டு ஏற்பாடுகளில் முன்னணி பங்கு வகித்தார். ஓபிஎஸ் அணியின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது திமுகவில் இணைய உள்ளது ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது, "அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்" என்று கூறினார். 

இது அதிமுகவின் உட்கட்சி பிளவுகளை மேலும் ஆழப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தரப்பு அதிமுகவிலிருந்து ஆதரவாளர்களை ஈர்க்கும் உத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் அணியின் முக்கிய புள்ளிகள் திமுகவுக்கு செல்வது, அதிமுக - என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவாக அமையலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

திருச்சி பகுதியில் வலுவான செல்வாக்கு கொண்ட வெல்லமண்டி நடராஜனின் இணைப்பு திமுகவுக்கு டெல்டா மாவட்டங்களில் கூடுதல் வலிமை சேர்க்கும். ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தமிழக அரசியல் சூடுபிடித்துள்ளது!

இதையும் படிங்க: தவெகவில் அடுத்தடுத்து அவமானங்களால் செங்கோட்டையன் அப்செட்!! எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share