×
 

மத்திய அமைச்சர் எல்.முருகன் சட்டசபை தேர்தலில் போட்டி? ராசிபுரமா? தாராபுரமா? பாஜக தீவிர ஆலோசனை!

மத்திய அமைச்சர் முருகன், ராசிபுரம் அல்லது தாராபுரம் தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முக்கிய தலைவர்களின் வேட்பாளர் பட்டியல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, மத்திய இணை அமைச்சரும் முன்னாள் தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் ராசிபுரம் அல்லது தாராபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் தற்போது நயினார் நாகேந்திரன், ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், சரஸ்வதி ஆகியோர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இம்முறை பாஜக 40 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. அதில் 15 முதல் 20 தொகுதிகள் வரை பாஜக விரும்பும் இடங்களாக அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறை அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு வேட்பாளர் பட்டியலை பாஜக தயாரித்து வருகிறது.

சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட மறுத்துவிட்டார். கோவை வடக்கு தொகுதியில் வானதி, நாகர்கோவில் தொகுதியில் காந்தி ஆகியோர் தங்கள் பழைய தொகுதிகளிலேயே போட்டியிட வாய்ப்பு உள்ளது. நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி பதிலாக சாத்தூர் தொகுதியில் களமிறங்க உள்ளார்.

இதையும் படிங்க: கள நிலவரத்தையே தெரிஞ்சுக்காம எப்பிடி ஜெயிப்பிங்க! பாஜக மேலிட தலைவர்கள் மெத்தனம்! மாவட்ட நிர்வாகிகள் புகார்!

அண்ணாமலை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். முருகன் ராசிபுரம் அல்லது தாராபுரம் (அவர் 2021-ல் தாராபுரத்தில் மிக நெருக்கமான தோல்வியை சந்தித்த இடம்) தொகுதியில் நிறுத்தப்பட உள்ளார். வேளச்சேரி தொகுதியில் தமிழிசை சௌந்தரராஜன் அல்லது கராத்தே தியாகராஜன் அல்லது டால்பின் ஸ்ரீதர் ஆகியோரில் ஒருவர், தி.நகர் தொகுதியில் நாகராஜன் அல்லது வினோஜ் செல்வம் போட்டியிட வாய்ப்புள்ளது.

மதுரை வடக்கு, பரமக்குடி, கே.வி.குப்பம் உள்ளிட்ட தொகுதிகளிலும் பாஜக வலுவாக களமிறங்க திட்டமிட்டுள்ளது. அதிமுகவுடனான கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகும் நிலையில், பாஜகவின் இந்த தேர்வுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகனின் தாராபுரம் அல்லது ராசிபுரம் முடிவு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு..! பரபரப்பு அரசியல் களம்..! விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share