திமுகவா? தவெகவா? யாருடன் கூட்டணி!! ராகுல் காந்தி முடிவு என்ன? டெல்லியில் இன்று ஆலோசனை!
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று ராகுல்காந்தியுடன் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
டெல்லி: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-க்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 17) மாலை 4 மணிக்கு இந்திரா பவனில் நடைபெறும் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்த கூட்டத்தில் திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைப்பதா அல்லது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் புதிய கூட்டணி அமைப்பதா என்பது குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் பிரதான கூட்டணிக் கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆனால், நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கிய பிறகு கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை பலர் தவெகவுடன் கூட்டணி வைத்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும், அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: 50 தொகுதி, துணை முதல்வர், அமைச்சர் பதவி!! தவெகவுடன் கூட்டணி வைக்க டெல்லி செல்லும் காங்., குழு!
பிரவீன் சக்கரவர்த்தி போன்ற ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள தலைவர்கள் தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது, ராகுல் காந்தி விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு ஆதரவு தெரிவித்தது ஆகியவை இந்த ஊகங்களுக்கு வலு சேர்த்துள்ளன.
மேலும், ஜனநாயகன் பொங்கல் விழாவில் திருச்சி வேலுசாமி போன்ற மூத்த தலைவர்கள் திமுகவுடன் ஆட்சி பங்கு கோரியது கட்சியில் உள்ள அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டியது.
தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர் கோபண்ணா வெளியிட்ட அறிக்கையின்படி, இன்றைய கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
திமுகவுடன் தொடர்ந்து இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதா? அல்லது விஜய்யின் ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் காங்கிரஸை வளர்க்க தவெகவுடன் கூட்டணி அமைப்பதா? என்பது இன்று மாலைக்குள் தெளிவாகத் தெரியும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு தமிழக அரசியலை முற்றிலும் மாற்றக்கூடியதாக இருக்கும். கட்சி மேலிடத்தின் இறுதி முடிவு எதுவாக இருக்கும் என்பதை ரசிகர்களும், அரசியல் ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்!
இதையும் படிங்க: பேப்பரை எழுதி கொடுத்ததையே தப்பா படிக்கும் விஜய்!! வச்சு செய்யும் தி.மு.க., ஐ.டி.,அணி!! சத்யராஜ் மகள் கிண்டல்!