திமுகவை டீலில் விட்டு விஜய்க்கு டிக் அடித்த தேமுதிக!! பிரேமலதா சொன்ன முக்கிய மேட்டர்!!
கூட்டணி தொடர்பான கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ள சில கருத்துகள் கவனம் பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் நிலையில், கூட்டணி அமைப்பது குறித்து தேமுதிக (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) தரப்பில் தொடர்ந்து பெரும் சஸ்பென்ஸ் நிலவி வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், மக்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் அவர் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, "முருகனின் ஆசீர்வாதத்துடன் வந்துள்ளேன். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, சரியான முடிவை எடுப்போம். முருகன் அருளால் நல்ல கூட்டணி அமையும். அது அனைவருக்கும் நன்மை தரும் கூட்டணியாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: யாருகூட கூட்டணினு சொல்லுங்க?! தொகுதி எத்தனைனு அப்புறம் பேசலாம்! தேமுதிக பிரேமலதாவுக்கு திமுக - அதிமுக ப்ரசர்!
இந்த பதில் மூலம், தேமுதிக தரப்பு இன்னும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதையும், ஆனால் நேர்மறையான எதிர்பார்ப்புடன் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்த கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல், "கூட்டாட்சி என்று அவர்கள் அறிவித்துள்ளனர். அதைப் பற்றி அவர்களிடமே கேளுங்கள்" என்று தட்டிக்கழித்தார். அதேநேரம், 2026 தேர்தல் குறித்து பேசியபோது, "இது தமிழக மக்களுக்கு மாற்றத்தை தரும் தேர்தலாக அமையும். ஒரு வெற்றியை கொடுக்கும் தேர்தலாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிரேமலதா "நாம் ஏன் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்?" என்று ட்விஸ்ட் கொடுத்தது நினைவுகூரத்தக்கது.
என்டிஏ தரப்பில் பிரதமர் மோடி மதுராந்தகம் கூட்டத்தில் தேமுதிகவை இழுக்க பெரும் முயற்சி எடுக்கப்பட்ட போதும், கட்சி பிடிகொடுக்கவில்லை. மறுபுறம் திமுக உடனான ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாகவும் வதந்திகள் எழுந்தன. இந்த சூழலில் பிரேமலதாவின் "மாற்றம்" மற்றும் "வெற்றி" என்ற வார்த்தைகள், தேமுதிக யாருடன் இணைந்தாலும் அந்த அணி வெல்லும் என்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழக அரசியலில் தேமுதிகவின் முடிவு எப்போதும் திருப்புமுனையாக அமைந்து வந்துள்ளது. இம்முறையும் அவர்களின் கூட்டணி அறிவிப்பு தேர்தல் களத்தை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரிய நேரத்தில் வரும் அறிவிப்பு எந்த திசையை நோக்கி செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: இலவம் காத்த கிளி தேமுதிக!!! 21 தொகுதி ஒரு எம்.பி சீட்டு!! பிரேமலதா போட்டு வைத்த அரசியல் கணக்கு!