அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல! காங்கிரசை கண்டுக்காத விஜய்!! பீகார் முடிவால் பின்வாங்கல்!
காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்ற முடிவில் இருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது, தன் முடிவில் இருந்து பின் வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.), காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற முடிவில் இருந்தது. ஆனால், பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், த.வெ.க. தனது முடிவை மாற்றியுள்ளது. இப்போது த.வெ.க., தனித்துப் போட்டியிடுவதே உத்தியாக இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் தனது அரசியல் பயணத்தை தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி மேற்கொண்டார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் நடத்திய பிரமாண்ட மாநாடுகளில் ஏராளமான மக்கள் திரண்டனர். இந்தக் கூட்டத்தைப் பார்த்து, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சி அடைந்தன.
அதன் தொடர்ச்சியாக, சில மாதங்களுக்கு முன்பு விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். வாரத்திற்கு ஒரு நாள் மட்டும், சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்த அவர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர், அரியலூர் போன்ற மாவட்டங்களைச் சுற்றினார். அங்கு ஏராளமான மக்கள் திரண்டு வரவேற்றனர்.
இதையும் படிங்க: 39 தொகுதி வேணும்!! திமுகவிடம் அடம் பிடிக்கும் காங்., ஐவர் குழு! தேர்தல் கணக்கு!
ஆனால், கரூரில் நடந்த பிரச்சாரத்தின் போது கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சோக சம்பவத்தால் விஜய் தனது பிரச்சாரப் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்தினார். இதற்கிடையே, த.வெ.க. முன்னணி தலைவர்கள், கூட்டணி வாய்ப்புகளைப் பார்க்க முடிவு செய்தனர். அதன்படி, அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தினர்.
அ.தி.மு.க. தரப்பில், வெளியில் "த.வெ.க. உடன் பேச்சு நடக்கவில்லை" என்று சொல்லப்பட்டாலும், உள்ளுக்குள்ளம் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்குவது, ஆட்சியில் பங்கு கோராமல் இருப்பது போன்ற நிபந்தனைகளை வைத்தனர். இந்தக் கண்டிப்பான நிபந்தனைகள் த.வெ.க. தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்தன. அதனால் அ.தி.மு.க. உடன் நடந்த பேச்சுகளை அவர்கள் நிறுத்தினர்.
அடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க. பேச்சுவார்த்தை நடத்தியது. அங்கு காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. கூட்டணி குறித்து விஜய் நேரடியாக ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோருடன் பேச வேண்டும் என்றும் கூறப்பட்டது.
தமிழக காங்கிரஸில் 60 சதவீத நிர்வாகிகள் த.வெ.க. உடன் கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நம்பிக்கை வார்த்தைகளால், த.வெ.க. மேல் மட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி உறுதி என்ற நிலை உருவானது. வேகமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
ஆனால், இந்தச் சூழலில் பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. அங்கு 'மஹா கட்பந்தன்' கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவிடம் 61 தொகுதிகளைக் கேட்டு வாங்கியது. ஆனால், வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
முழு கூட்டணியும் படுதோல்வி அடைந்தது. இந்தத் தோல்வி த.வெ.க. நிர்வாகிகளை கலவரமடையச் செய்தது. "கூடுதல் தொகுதிகள் கொடுத்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி இதே போல் தோல்வியடையும்" என்ற அச்சம் அவர்களிடம் உருவானது.
இதனால், காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையைத் த.வெ.க. நிறுத்தியது. தனித்துப் போட்டியிடுவது உத்தியாக மாற்றியது. அதன் தொடர்ச்சியாக, திமுக உடன் கூட்டணி பேச்சைத் தொடங்குவதற்காக, காங்கிரஸ் மேலிடம் ஐவர் குழுவை அமைத்துள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. த.வெ.க. இந்த முடிவைத் தனது பொதுக்குழுவில் உறுதிப்படுத்தியுள்ளது.
விஜய் தலைமையில் த.வெ.க. தனித்துப் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கூரியல் கூறுகின்றனர். பீகார் தோல்வி, த.வெ.க. கூட்டணி உத்திகளை முற்றிலும் மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவோ? தவெகவோ? நமக்கு 125 சீட்டு கன்பார்ம்!! தொகுதிகள் எவை எவை? காங்கிரஸில் தேர்தல் பணிகள் ஜரூர்!