இவரு உலக மகா நடிகன்.. முழு நேரமாகவே நடிக்க போலாம்.. முதல்வர் ஸ்டாலினை வம்புக்கிழுத்த அண்ணாமலை..!
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்று அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது;
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்..! பேசாம நடிக்கவே போயிருங்க ஸ்டாலின்.. நார் நாராக கிழித்த அண்ணாமலை..!
பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.
அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் முழு நேரமாக நடிக்கச் செல்லலாம்.
ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலை முயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல் சென்னை, வேலூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், திமுக அரசின் கையாலாகாத்தனத்தால் தாமதமாகியிருக்கின்றன. சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துவது தொடங்கி, சாலை அமைக்க மூலப் பொருள்கள் கிடைப்பது வரை, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், சாலைப் பயணம் தனக்கு சொகுசாக அமையாது என்று தெரிந்து, தொடர்ந்து வேலூர் செல்லும்போதெல்லாம் ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தனது அரசின் கையாலாகாத்தனத்தை மறைக்க, ரயில் கட்டண உயர்வு என்று நாடகமாடுகிறார்.
ரயில் கட்டணமானது, புறநகர் ரயில் டிக்கெட்கள் மற்றும் மாதாந்திர பயண அட்டை பெறுவோருக்கும், இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கான கட்டணத்திலும் எந்த மாற்றமும் இல்லை. தினந்தோறும், தங்கள் அலுவலகங்களுக்குப் புறநகர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டண உயர்வு இல்லை.
தொலைதூர ரயில்களில், குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா மற்றும் குளிர்சாதன வசதியற்ற மற்றும் மெயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்களுக்கு 1 பைசா என, மிகக் குறைந்த அளவே கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 500 கிலோ மீட்டருக்கு அதிகமான பயணங்களுக்கு கிலோ மீட்டருக்கு 0.5 பைசா என்ற அளவில் மட்டுமே உயர்வு இருப்பதாகத் தெரிகிறது.
ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், பால் விலை, மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம் என அனைத்துத் துறைகளிலும் பல மடங்கு கட்டணத்தை உயர்த்தி விட்டு, 1 பைசா, 2 பைசா ரயில் கட்டண உயர்வுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பண்டிகை நாட்களில், தனியார் பேருந்துகளில் பல ஆயிரங்களில் கட்டணக் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் முதலமைச்சர், மிக மிகச் சொற்பமான ரயில்வே கட்டண உயர்வை விமர்சிப்பது நகைமுரண் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: போராடும் மாணவிகளை ஏன் அலைக்கழிக்கிறீங்க..? திமுக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி..!