வீசிய விஜய் அலையிலும் வாக்கு அறுவடை உச்சம்!! டெல்லி தலைமைக்கு பாஜக புள்ளி விவரத்துடன் பெருமிதம்!
தமிழக வெற்றி கழகத்திற்கு அடுத்து, அதிக ஓட்டு சதவீதத்தை பெற்ற கட்சி பா.ஜ., தான். விஜய் அலையிலும் பா.ஜ., தன் ஓட்டுகளை தக்க வைத்து கொண்டது.
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., தனது ஓட்டு சதவீதத்தை அதிகரித்துள்ளதாக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த முக்கிய தகவல்களை வெளியிட்டார்.
“2024 லோக்சபா தேர்தலில் 23 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிட்டது. அந்தத் தொகுதிகளில் மொத்தம் 2.50 கோடி ஓட்டுகள் பதிவாகின. அதில் பா.ஜ., 49.18 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 19.62 சதவீதம் ஓட்டு சதவீதத்தைப் பதிவு செய்தது. ஆனால், இந்த சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., 27 தொகுதிகளிலும், தாமரை சின்னத்தில் கூட்டணிக் கட்சிகள் 6 தொகுதிகளிலும் என மொத்தம் 33 தொகுதிகளில் களமிறங்கியது” என்றார் நாராயணன்.
இந்த 33 தொகுதிகளில் மொத்தம் 66.03 லட்சம் ஓட்டுகள் பதிவாகின. இதில் பா.ஜ., 14.67 லட்சம் ஓட்டுகளைப் பெற்று 22.22 சதவீதம் ஓட்டு சதவீதத்தை எட்டியுள்ளது. அதாவது, லோக்சபா தேர்தலைவிட சட்டசபைத் தேர்தலில் பா.ஜ., அதிக ஓட்டு சதவீதம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரங்கள்ல மூக்கை நுழைக்காதீங்க! பாஜகவினருக்கு கடிவாளம் போட்ட டெல்லி தலைமை!!
மேலும், 2021 சட்டசபைத் தேர்தலில் 48 சதவீத ஓட்டுகளைப் பெற்ற தி.மு.க., இந்தத் தேர்தலில் 24 சதவீதமாக பாதியாகக் குறைந்துள்ளது. வி.சி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஓட்டு சதவீதமும் கணிசமாகக் குறைந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு சதவீதத்தை பா.ஜ.,தான் பெற்றுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“விஜய் அலையில் பா.ஜ., தனது ஓட்டுகளை மட்டும் தக்க வைத்துக் கொள்ளவில்லை, மேலும் அதிகரித்தும் உள்ளது. இது பா.ஜ.,வின் அடித்தளம் வலுப்பெற்று வருவதைக் காட்டுகிறது” என்று நாராயணன் தெரிவித்தார்.
தமிழக அரசியலில் பா.ஜ., தொடர்ந்து தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த ஓட்டு சதவீத உயர்வு பா.ஜ.,வுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. வரும் நாட்களில் கூட்டணி உத்திகள் மற்றும் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து பா.ஜ., தீவிர ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் சமன்பாட்டில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பா.ஜ.,வின் வளர்ச்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?