×
 

“உடனே புறப்பட்டு வாங்க...” - அமித் ஷாவிடம் இருந்து வந்த அழைப்பு... திடீரென நயினார் நாகேந்திரன் டெல்லி பயணம்...!

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

பாஜக மாநில தலைவர் நயினார் நாகஜேந்திரன் இன்றைய தினம் டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. பூத் ஏஜெண்ட்களுக்கு பயிற்சி அளிப்பது முதல் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் வரை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக அங்கம் வகுக்கும் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துவிட்டது. ஆனால் எதிர்தரப்பான அதிமுக தரப்பில் இதுவரை கூட்டணி கட்சிகளை இறுதி செய்வதிலேயே இழுபறி நீடித்து வருகிறது.

மற்றொருபுறம் புதிய கட்சி ஆரம்பிக்கும் பணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன் என டிடிவி தினகரன், தவெகவிற்கு தாவப்போகிறேன் என செங்கோட்டை ஆகிய 3 பேரும் இபிஎஸுக்கு குடைச்சல் கொடுத்து வருவதால், உட்கட்சி பிரச்சனைகளுக்கே அதிமுகவிற்கு சரியாக உள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திடீரென இன்று டெல்லி செல்ல உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: "என்னய்யா நடக்குது தமிழகத்துல..." - ஒரே நாளில் 4 பாலியல் பலாத்காரம், 8 கொலைகள்... கொந்தளித்த நயினார்...!

டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக மாநில தேர்தல் ஒருங்கிணைப்பாளர் பைஜயந்த் பாண்டா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது வரக்கூடிய தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த வியூகங்கள், தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

2026 தமிழக சட்டசபை தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டாவும், துணை பொறுப்பாளராக முரளிதர் மொஹோல் நியமனம் செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த பிரத்யேகமாக தனிக்குழு ஒன்றினை அமைக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின் போது இதுதொடர்பாகவும் ஜே.பி.நட்டா மற்றும் அமித் ஷாவிடம் நயினார் நாகேந்திரன் ஆலோசிப்பார் எனக்கூறப்படுகிறது. 

அதேபோல் அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட மோதல்கள் வெடித்துள்ளன. ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளது, செங்கோட்டையன் தவெகவில் இணைய முடிவெடுத்துள்ளது போன்ற விவகாரங்கள் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் இந்த கூட்டத்தின் போது ஆலோசிக்கப்படவுள்ளது. இப்படியான பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்லவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திருச்சி அல்லது மதுரை விமான நிலையத்தில் இருந்து நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டுச் செல்லக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  


 

இதையும் படிங்க: புதிய தொழிலாளர் சட்டம் பிரதமரின் தற்சார்பு பாரத கனவு… நயினார் நாகேந்திரன் பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share