×
 

NDA-க்குள் மீண்டும் ஓபிஎஸ்... பாஜகவில் ஐக்கியமாகும் அதிமுகவினர்...கூட்டணிக்குள் கொளுத்திப் போட்ட ராம சீனிவாசன்...! 

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் ஓபிஎஸ் வருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று பாஜக கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன், தேனி மாவட்டத்தில் உள்ள திமுக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டிருப்பது  தமிழகத்தில் பாஜக பன்மடங்கு வளர்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்.

அதிமுகவினர் பாஜகவில் இணைவதால் தேசிய கூட்டணிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதிமுகவினர் பாஜகவில் இணைவதும், பாஜகவினர் அதிமுகவில் இணைவதும், ஏற்கனவே நடந்தது தான். தற்போதைய மாநில தலைவராக உள்ள நயினார் நாகேந்திரனும் அதிமுகவில் இருந்து பாஜகவிற்கு வந்தவர் தான், திமுகவினரும் பாஜகவில் இணைந்துள்ளனர்.‌ இதற்கு காரணம் பாஜகவின் கொள்கையை ஏற்று தங்களை இணைத்துக் கொள்வது தான், ஒரு கட்சியின் வளர்ச்சியை தடுத்து தங்களது கட்சியை வளர்த்தால் தான் தவறு. பாஜக அதனை ஒரு போதும் செய்யாது.

பாஜக மதவாதத்திற்கு எதிரான கட்சி என்பதை கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் மாற்றியிருக்கிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும். பாமக திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக விரைவில் இணையும். இதேபோல் தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு செய்யும் வழக்கம் கொண்ட தேமுதிகவும் திமுக எதிர்ப்பு நிலைப்பாடு உடையவர்கள். எனவே இவ்விரு கட்சிகளும் விரைவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவார்கள்.

இதையும் படிங்க: அமித்ஷாவுடனான சந்திப்பு… உத்தேச பட்டியல் கொடுத்தேனா?... நயினார் நாகேந்திரன் பேட்டி…!

அதேபோல ஓ.பி.எஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரும் திமுக எதிர்ப்பு மனநிலை உடையவர்கள். திமுகவிற்கு பலம் சேர்க்கும் விதமாக தங்களது முடிவுகளை ஒரு போதும் அவர்கள் எடுக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. பொருத்திருந்து பார்க்கலாம். திமுக மீண்டும் ஆட்சியமைக்கக் கூடாது என்ற முனைப்பில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக செயல்படும்.  திமுகவிற்கு எதிரான அனைத்து வாக்குகளையும் ஒருங்கிணைத்து வெற்றி பெறுவது தான் பாஜகவின் இலக்கு. ஏனெனில் திமுக வளர்ச்சிக்கு எதிரான கட்சி, இந்துக்களுக்கு எதிரான கட்சி, ஊழல் கட்சி, மத்திய அரசுக்கு எதிரான கட்சி. இது தமிழக நலனுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்குமானது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் காந்தியின் பெயரில் எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். மத்திய அரசின் திட்டங்களுக்கு பிரதமர் மோடி பெயர் வைக்க வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தியும் அதனை ஏற்காத பிரதமர், காங்கிரஸ் செய்த தவறை நானும் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்தார். அதன்படி மத்திய அரசின் திட்டங்களுக்கு பிரதமர் திட்டம் என்று மட்டும் தான் இருக்கும்.

காந்தியின் பெயர் மாற்றத்தால் எவ்வித அவமதிப்பும் ஏற்படாது. காந்தியின் பிறந்த நாள் பாஜக சார்பில் ஒரு வாரம் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் காந்தியின் பிறந்த நாள் விழாவை இது போல் கொண்டாடியது உண்டா.? எனவே காந்தியை பற்றி பாஜகவினருக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம்.

கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் தான், யார் மீது நடவடிக்கை என்பது தெரியவரும். திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற  தனி நீதிபதி உத்தரவிட்டும், தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருப்பதால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என தமிழக அரசு தெரிவித்தது.

இதே நிலைப்பாட்டை கலைஞர் மறைந்த போது, அவருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் எழுந்த பிரச்சினையில் நீதிபதி அளித்த தீர்ப்பிற்கு எதிராக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்திருந்தால் என்னவாயிருக்கும் என்பது திமுகவினர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சில விஷயங்களில் பின் விளைவுகள் என்ன வரும் என்பதை முன்கூட்டி அறிந்து செயல்பட வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசு இது போல் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செயல்படாததால் தேர்தல் நேரத்தில் அது எதிரொலிக்கும். பாஜக இதனை நிச்சயம் முன்னெடுக்கும். ஏனெனில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது இந்துக்களின் உரிமை. உள்துறை அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரின் தமிழக வருகை நிச்சயம் இருக்கும். தேதி இன்னும் முடிவாகவில்லை. தேதி முடிவானதும் அறிவிக்கப்படும்.

சசிகலா தனிக்கட்சியோ அமைப்பாகவோ செயல்படவில்லை. கட்சியாகவோ, அமைப்பாகவோ செயல்பட்டால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற முடியும். அதேநேரத்தில் அவர் திமுக எதிர்ப்பாளர். எனவே சசிகலாவின் ஆதரவும், ஆசியும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தான் இருக்கும் என நம்புகிறோம்.

சமீபத்தில் டெல்லியில் பாஜக தலைவர்களை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ். அனைத்தையும் பரிசீலனையில் வைத்துள்ளார். எனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஓ.பி.எஸ். மீண்டும் இணைவார். கூட்டணியை வலுப்படுத்துவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜக, சட்டமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை கேட்கும். அதே நேரத்தில் பிடிவாதமோ, அழுத்தமோ, தர்ம சங்கடமின்றி தொகுதிகள் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்
 

இதையும் படிங்க: வஞ்சிக்கப்படும் விவசாயிகள்..! நாடு போற்றும் நல்லாட்சி? நல்லாருக்கு லட்சணம்.. நயினார் விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share