×
 

பாஜகவின் புதிய தேசிய தலைவர் யார்?!! தீவிர ஆலோசனை!! ஜன., 20-ல் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!!

பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார் என்ற அறிவிப்பு, வரும் 20ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) புதிய தேசிய தலைவர் யார் என்பது வரும் ஜனவரி 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போது கட்சியின் தேசிய செயல் தலைவராக இருக்கும் நிதின் நபின் போட்டியின்றி இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி செய்து வரும் நிலையில், கட்சியின் தேசிய தலைவர் பதவி மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது. ஜே.பி. நட்டா 2020-ஆம் ஆண்டு தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். 

கட்சி விதிகளின்படி இப்பதவிக்கு 2 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உண்டு. அதன் பின் ஒரு முறை நீட்டிப்பு வழங்கலாம். இதன்படி நட்டா அதிகபட்சம் 4 ஆண்டுகள் பதவியில் இருந்தார். 2024 லோக்சபா தேர்தல் காரணமாக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் மாநில தலைவர்கள் தேர்வு தாமதம் ஆகியதால் புதிய தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: பொங்கல் ரேஸில் முந்தியது டாஸ்மாக்!! 2 நாட்களில் ரூ. 518 கோடிக்கு மது விற்பனை!

இந்நிலையில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட எம்.பி. கே.லட்சுமண் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனவரி 19-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறும். ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால் ஜனவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதே நாளில் புதிய தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்.

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 10 மூத்த தலைவர்கள் முன்மொழிவோராக பங்கேற்பர். குறிப்பாக மோடி மற்றும் ஷா இணைந்து நிதின் நபினை முன்மொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் போட்டியின்றி தேர்வாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

45 வயதான நிதின் நபின் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். பங்கிபூர் தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முன்னாள் அமைச்சரான இவர், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் தேசிய தலைவராக தேர்வானால், பாஜக வரலாற்றில் இளம் வயதில் (45) பதவி ஏற்கும் முதல் தலைவர் என்ற பெருமையைப் பெறுவார்.

இந்த தலைமை மாற்றம் பாஜகவில் தலைமுறை மாற்றத்தை குறிக்கிறது. மோடி, ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆதரவுடன் நிதின் நபின் பதவியேற்பது கட்சியின் எதிர்காலத்திற்கு புதிய ஆற்றலை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 20-ஆம் தேதி டெல்லி கட்சி தலைமையகத்தில் நடைபெறும் நிகழ்வு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது!

இதையும் படிங்க: BREAKING!! சொன்னபடி துவங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!! சீறிப்பாய்ந்தது காளைகள்! காளையர்கள் பாய்ச்சல்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share