×
 

தோல்விக்கு பொறுப்பேத்துக்கிட்டு ராஜினாமா பண்ணுங்க! நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கலகக்குரல்! பாஜக அதிர்ச்சி!

தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஏ.என்.எஸ், பிரசாத், தமிழக பா.ஜ., கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ளார்.

சென்னை: தமிழக பா.ஜ., செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து மீண்டும் நீக்கப்பட்ட ஏ.என்.எஸ். பிரசாத், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக தீவிரமாகக் கிளர்ச்சி செய்யத் தொடங்கியுள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பா.ஜ.,வுக்குள் புதிய பூசல் வெடித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் கூட்டணிப் பேச்சுகள் நடைபெற்றபோது, பிரசாத் ‘தே.ஜ., கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். இதனால் அவர் செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். சில நாட்களில் மீண்டும் அப்பொறுப்பு வழங்கப்பட்டது. 

தேர்தல் முடிவுகளுக்குப் பின் சில தினங்களுக்கு முன் பிரசாத் மற்றொரு அறிக்கை வெளியிட்டார். அதில், “த.வெ.க., தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கோரினார். இதைத் தொடர்ந்து அவரது பதவி மீண்டும் பறிக்கப்பட்டது.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணியின் பெரிய தலைக்கே ஆப்பு வைத்த சசிகலா!! நயினார் நாகேந்திரன் தோற்க காரணம் யார் தெரியுமா?

இந்நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் விஜய்க்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கூறினேன். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், உள்நோக்கத்துடன் என்னை நீக்கியது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளராக என்னை அறிவிக்கும் சூழல் இருந்தும், எனது வளர்ச்சியை வேண்டுமென்றே தடுக்கிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார். தேர்தலில் பா.ஜ., தோல்விக்கு பொறுப்பேற்று நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், எல்.முருகன் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தலுக்கு முன் த.வெ.க.,வை கூட்டணியில் இழுக்க வேண்டும் என பிரசாத் வலியுறுத்தியது பா.ஜ., உயர்மட்டத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இப்போது அவரது தொடர் அறிக்கைகள் கட்சிக்குள் பெரும் பூசலை உருவாக்கியுள்ளன. பா.ஜ.,வின் தமிழக அரசியல் உத்திகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்த உள் மோதல் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளையும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றனர்.

பிரசாத்தின் இந்தப் போக்கு தமிழக பா.ஜ.,வில் புதிய அணி சேர்க்கைக்கு வழிவகுக்குமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டுல காங்., கட்சி எங்க இருக்கு?! யாருக்குமே தெரிலயே! நயினார் நாகேந்திரன் கிண்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share