×
 

"எங்க கூட்டணிக்கு எடப்பாடி தான் பாஸ்!" கூட்டணித் தலைவர் இ.பி.எஸ் தான்; நயினார் ஓப்பன் டாக்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாகக் காங்கிரஸ் பேசுவதைப் பார்த்தால், அக்காட்சி விஜயை நோக்கி நகர்வது போல் தெரிகிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபினின் கோவை வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீடு மற்றும் தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அவர் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.

"அதிமுக உடனான தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எதையும் கேட்கவில்லை, பேசவும் இல்லை; இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி சுமுகமான முடிவு எடுக்கப்படும்" என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை அதன் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று குறிப்பிட்ட அவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் எடப்பாடி பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்றார். மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக இணைய வேண்டும் என விரும்புகிறோம்; ஆனால் இறுதி முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது" எனத் தூது விட்டார்.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத் தணிக்கைச் சிக்கல் குறித்துப் பேசிய அவர், "சென்சார் போர்டுக்கும் பாஜகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. திரைப்படங்களில் சிலவற்றைச் காட்டலாம், சிலவற்றைச் காட்டக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. அதன் அடிப்படையிலேயே உறுப்பினர்கள் கருத்து கூறியுள்ளனர். இதில் பாஜகவைச் சம்பந்தப்படுத்துவதை ஏற்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து திமுக அரசைச் சாடிய அவர், "532 பொய வாக்குறுதிகளைக் கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. ஜாக்டோ ஜியோவினருக்குப் பழைய ஓய்வூதியம் தருவோம் எனச் சொல்லி 5 ஆண்டுகளாக ஏமாற்றிவிட்டு, இப்போது ஜூன் மாதம் தருவோம் என்கிறார்கள். ஜூன் மாதம் நிச்சயம் திமுக ஆட்சியில் இருக்காது. இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயல்" என ஆவேசமாகத் தெரிவித்தார். பாஜக யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், ஓபிஎஸ் - தினகரன் இணைப்பு குறித்து அதிமுக தலைமையே முடிவு செய்யும் என்றும் கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!  

இதையும் படிங்க: 2026 தேர்தலுக்கான வியூகங்கள் தயார்! பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை!!  

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share