×
 

ஒன்றில் தனிச்சின்னம்!! மற்றதில் உதயசூரியன்! மதிமுக ஆலோசனை கூட்டத்தில் வைகோ முடிவு?!

சட்டசபை தேர்தலில் திமுக ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிடலாம் என்று மதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியிறுத்தி உள்ளனர். மேலும் ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், மதிமுக ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கட்சியின் அவசர உயர்நிலைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் திமுக தலைமையில் தீவிரமடைந்து வருகின்றன. மதிமுகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், மேலும் ஒரு தொகுதியில் குறைந்தபட்சம் தனிச்சின்னத்தில் போட்டியிட அனுமதி வழங்க வேண்டும் என்று மதிமுக திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. 

ஆனால் திமுக தரப்பு, ஒதுக்கப்படும் அனைத்து தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று உறுதியாகக் கூறி வருகிறது. இதனால் தொகுதி எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

இதையும் படிங்க: விடுதலை புலிகள் விவகாரம்...! முடியவே முடியாது..! வைகோ மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!!

இந்த சூழலில் சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுகவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை நிலவரம், சின்னம் தொடர்பான பிரச்னை, கட்சியின் எதிர்கால தேர்தல் உத்தி ஆகியவை விரிவாக விவாதிக்கப்பட்டன. 

பெரும்பாலான நிர்வாகிகள், கட்சியின் பதிவு அங்கீகாரத்தை தக்க வைப்பதற்காக ஒரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மற்ற தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

இதன்மூலம் மதிமுக தனது அடையாளத்தை பேணுவதோடு, கூட்டணியிலும் தொடர்ந்து இருக்க முடியும் என்ற நிலை உருவாகும் என்று நிர்வாகிகள் நம்புகின்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை திமுக தலைமைக்கு தெரிவிக்கவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை உறுதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக அரசியலில் மதிமுகவின் இந்த நிலைப்பாடு கூட்டணி சமன்பாடுகளை பாதிக்குமா என்பது தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது. திமுகவின் முடிவைப் பொறுத்தே அடுத்த கட்டம் தீர்மானமாகும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதையும் படிங்க: தனிச் சின்னத்தில் போட்டி... ராஜ்ய சபா சீட்..! திமுகவிற்கு ஹை டிமாண்ட் வைக்கும் மதிமுக...!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share