×
 

உதயநிதி ஸ்டாலினுக்கு சிக்கல்! சொத்துக்கணக்கில் பிழை?! வருமான வரித்துறைக்கு கோர்ட் உத்தரவு!

துணை முதல்வர் உதயநிதி வேட்புமனுவில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் வேட்பு மனுவில் உள்ள சொத்து விவரங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஆர். குமாரவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு, வருமான வரித்துறைக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணையை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மனுதாரர் குமாரவேல் தனது மனுவில், “2021 சட்டமன்றத் தேர்தலின்போது உதயநிதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்தில் 7.36 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார். 

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

ஆனால் தற்போதைய வேட்பு மனுவில் இந்த முதலீடு குறித்து எந்தத் தகவலும் இல்லை. அவரது மனைவி இதே நிறுவனத்தில் 2.63 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக மட்டும் கூறப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை குறித்து முறையான விளக்கம் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “2021-ல் ‘ஸ்னோ ஹவுசிங்’ நிறுவனத்துக்கு 11.6 கோடி ரூபாய் கடன் கொடுத்ததாகக் கூறிய உதயநிதி, தற்போது 10 கோடி ரூபாய் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். மீதமுள்ள 1.6 கோடி ரூபாய் திருப்பிப் பெறப்பட்டதா என்பது குறித்து எந்த விவரமும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வருமான விவரத்திலும் முரண்பாடு உள்ளது. “2020-க்கு முன்பு 2.02 கோடி ரூபாய் வருமானம் என்று கூறியவர், தற்போது 10.98 கோடி ரூபாய் வருமானம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வருமான உயர்வு மற்றும் சொத்து மாற்றங்கள் குறித்து உரிய விளக்கங்கள் எதுவும் வேட்பு மனுவில் இல்லை” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சொத்து விவரங்களில் தவறான அல்லது முழுமையற்ற தகவல்களை வழங்குவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று வாதிட்ட மனுதாரர், இந்த முரண்பாடுகள் குறித்து வருமான வரித்துறையும், பெரு நிறுவன விவகாரங்கள் துறையும் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கு தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வருமான வரித்துறையின் அறிக்கை வந்த பிறகு வழக்கின் அடுத்தக் கட்டம் தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் சொத்துக்கணக்கில் தில்லுமுல்லு! வருமான வரித்துறை விசாரிக்க வேணும்! கோர்ட்டில் மனு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share