கொசுவலை போட்டது அவர் கொடுத்த ஐடியா! கவுன்சிலரை கையை காட்டிவிட்டு தப்பிக்கும் மேயர் பிரியா!
''சென்னையில் வடிகாலில் கொசுவலை ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்ததை அடிப்படையாக வைத்து போட்டு இருக்கின்றனர். மற்றப்படி அவ்வளவு சர்ச்சையாக மாற்றும் அளவுக்கு அது ஒரு விஷயம் இல்லை'' என மேயர் பிரியா நிருபர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: சென்னை மக்களை தற்போது அதிகமாக துன்புறுத்தி வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் வடிகால்களின் திறப்புகளை கொசுவலை போர்த்தி மூடும் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், சென்னை மேயர் ஆர். பிரியா இதுகுறித்து விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
நிருபர்களிடம் பேசிய மேயர் பிரியா, "இது கொசுக்களுக்காக மட்டும் போடப்படும் விஷயம் கிடையாது. ஒரு கவுன்சிலர் இதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து சில இடங்களில் கொசுவலை போடப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் அதிகாரபூர்வ அறிவிப்பாக வெளியிடப்பட்ட திட்டம் அல்ல. மேலும், இது அவ்வளவு பெரிய சர்ச்சைக்குரிய விஷயமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெரினா பீச்சில் குப்பை போட்டால் ரூ.5000 பைன்!! கறார் காட்டும் சென்னை மாநகராட்சி!! அதிரடி உத்தரவு!
சென்னையில் கடந்த சில மாதங்களாக டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசு கடிக்கும் நோய்கள் அதிகரித்து வருவதால், மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மழைநீர் தேங்கும் வடிகால்கள், கால்வாய்கள் கொசுக்களின் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளன.
இதனைத் தடுக்க பல்வேறு முறைகள் முயற்சிக்கப்பட்டாலும், இந்த கொசுவலை மூடும் முயற்சி புதிதாகவும், சற்று வித்தியாசமாகவும் தோன்றியதால் சமூக வலைதளங்களில் பெரும் கிண்டல்களுக்கு உள்ளானது. சிலர் "PONDS பவுடர் போல புதிய ஐடியா" என்றும், "திமிங்கலத்துக்கு கொசுவலை" என்றும் கிண்டலடித்து பதிவுகளை வெளியிட்டனர்.
எதிர்க்கட்சியான அதிமுகவின் ஐடி விங் உள்ளிட்டோர் இதை வைத்து வீடியோக்கள் வெளியிட்டு மேயர் பிரியாவை கிண்டலடித்து வருகின்றனர். ஆனால், மேயர் பிரியா இதை ஒரு சிறிய, உள்ளூர் அளவிலான முயற்சியாகவே குறிப்பிட்டு, பெரிதுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று விளக்கியுள்ளார். மாநகராட்சி ஏற்கனவே கொசு ஒழிப்புக்கு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இது அதன் ஒரு சிறு பகுதி மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னை மக்கள் கொசுத்தொல்லையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். வடிகால் சுத்தம், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளுடன் இணைந்து இத்தகைய புதிய யோசனைகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், அவை செயல்பாட்டில் எவ்வளவு பயன்தரும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு!! உதவி கமிஷனர் மாற்றத்தால் திமுக கவுன்சிலர்கள் திக்! திக்!!