×
 

வெடிக்குமா போராட்டம்?... பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க எதிர்ப்பு... 9 கிராம பிரதிநிதிகள் இன்று ஆலோசனை...!

தங்களது வாழ்வாதார நிலத்தைப் பறித்துவிட்டு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மீனவர்கள் உறுதியாக உள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் அரசுத் திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் கொந்தளித்துள்ளனர்.

இந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ள நிலையில், 9 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தற்போது இயங்கி வரும் தலைமைச் செயலகத்தில் இடப்பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகக் கூறி, அதற்கு மாற்றாக பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெரியார் கொள்கை எனக்கூறிவிட்டு ஊர்வலத்திற்கு தடையா? தவெக அரசை விளாசிய கி.வீரமணி!

இதற்காக சுமார் 26.36 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. 15 மாடிகளுடன் பிரம்மாண்டமான கட்டடத்தைக் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே இந்தப் பகுதி மக்களிடையே கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அடுத்த கட்டமாக என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு முக்கிய ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முல்லிக்குப்பம், முல்லிநகர் உள்ளிட்ட 9 கிராமங்களைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

அரசு வெளியிட்டுள்ள அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவது குறித்தும், சட்டப் போராட்டங்களை நடத்துவது அல்லது நேரடிப் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.

இந்த நிலம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏழை மக்கள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கப்பட்டதாகவும், தங்களுக்குச் சொந்தமான இந்தப் பாரம்பரிய நிலத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்றும் மீனவர்கள் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர்.

கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் வழிகள் இதனால் முற்றிலும் அடைபடும் என்றும், விஐபி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலால் தங்களது அன்றாட வாழ்க்கை முடங்கும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பகுதி ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், இங்கு பிரம்மாண்டமான கட்டடம் கட்டுவது இயற்கைக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

மறுபுறம், அரசுத் தரப்பில் இதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள தலைமைச் செயலகம் மிகவும் பழமையானதாகவும், சிறியதாகவும் இருப்பதால் நிர்வாகப் பணிகளுக்குச் சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் அவசியமான ஒன்று என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது.

மேலும், இதனால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கலங்கரை விளக்கம் முதல் அடையாறு வரை 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய உயர்மட்ட மேம்பாலம் ஒன்று அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்யின் முகாம் அலுவலகத்திற்கு அருகில் இந்தத் திட்டம் வருவதால், பாதுகாப்பு மற்றும் இதர வசதிகள் எளிதாகக் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், தங்களது வாழ்வாதார நிலத்தைப் பறித்துவிட்டு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மீனவர்கள் உறுதியாக உள்ளனர். திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு பொதுமக்களிடமாவது, அப்பகுதி மீனவர்களிடமாவது முறையான கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இன்று நடைபெறும் 9 கிராமங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களின் தொடர் எதிர்ப்புகளையும், போராட்ட அறிவிப்புகளையும் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எவ்வாறு சமாளிக்கப் போகிறது என்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: முதல்வர் பெயரில் போலி AI வீடியோ.. ராஜஸ்தானில் குற்றவாளியை வளைத்து பிடித்த சிபிசிஐடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share