×
 

பா.சிதம்பரம் புறக்கணிப்பு!! கண்டுகொள்ளாத கோவை காங்., வேட்பாளர்கள்! உள்கட்சி விரிசல்!

கோவை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தை, காங் வேட்பாளர்கள் சந்திக்கவில்லை.

கோவை: காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கோவை வந்தபோது, கட்சியின் சொந்த வேட்பாளர்கள் இருவரும் அவரை சந்திக்காமல் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் காங்கிரஸுக்கு கவுண்டம்பாளையம் மற்றும் சிங்காநல்லூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும், கவுண்டம்பாளையம் தொகுதியில் சூரிய பிரகாஷும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

நேற்று மதியம் கோவை விமான நிலையம் வந்த சிதம்பரம், மாலை கோவை தெற்கு மற்றும் சூலூர் தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இரவு ஈரோட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால், காங்கிரஸ் போட்டியிடும் இரு தொகுதிகளிலும் அவர் பிரசாரம் செய்யவில்லை. 

இதையும் படிங்க: டெல்லியா? தமிழ்நாடா? காங்., வேட்பாளர் தேர்வில் குடுமிப்பிடி சண்டை! கட்சிக்குள் நடக்கும் குழப்பம்!

கட்சியினர் கூறுகையில், “தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாலும், கோவையில் தனக்கு ஆதரவாளர்களுக்கு சீட் வழங்கப்படாததாலும் சிதம்பரம் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் செய்யவில்லை” என்றனர். 

இதைவிட அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், கோவை வந்த சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளர்கள் ஸ்ரீநிதியும் சூரிய பிரகாஷும் மரியாதை நிமித்தம்கூட சந்திக்கவில்லை. விமான நிலையத்தில் வரவேற்கவில்லை. அவர் ஓட்டலில் மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை தங்கியிருந்தபோதும் சந்திக்க செல்லவில்லை.

காங்கிரஸ் நிர்வாகிகள் இதுகுறித்து வருத்தம் தெரிவித்தனர். “சிதம்பரம் இந்த கூட்டணி உருவாக காரணமாக இருந்த மூத்த தலைவர். இரு வேட்பாளர்களும் இளைஞர்கள். அவர்கள் சிதம்பரத்தை சென்று சந்தித்திருந்தால் பிரச்சினை முடிந்திருக்கும். இது தவறான போக்கு” என்றனர்.

“சிதம்பரம் இன்றும் கோவையில் உள்ளார். அவர் புறப்படுவதற்கு முன்பு வேட்பாளர்கள் சந்தித்தால், அவர்மீது அதிருப்தியில் உள்ள சீனியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் பிரச்சினை தொடரும்” என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவை காங்கிரஸ் அமைப்பில் ஏற்கனவே இருந்த உள்கட்சி மோதல் இந்த சம்பவத்தால் மேலும் தீவிரமடைந்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த உள் பூசல் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: விஜயுடன் கூட்டணி அமையாததால் ராகுல்காந்தி அப்செட்! திமுகவுக்காக தூது போகும் கமல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share